

சென்னை,
2026-ம் ஆண்டுக்கான ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, வெற்றி பேரணி இந்த ஆண்டு நடைபெறாது என்று அறிவித்துள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கூட்ட நெரிசல் உள்ளிட்ட காரணங்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வெற்றி பேரணிக்கு பதிலாக, பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் வீரர்களுக்கு சிறப்பு பாராட்டு மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் அணியின் வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாகத்தினருக்கு ரசிகர்கள் முன்னிலையில் கவுரவம் அளிக்கப்படும் என கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு நடைபெற்ற வெற்றி கொண்டாட்ட நிகழ்வின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ரசிகர்கள் அதிக அளவில் திரண்டதால் பாதுகாப்பு சவால்கள் உருவாகி, துயர சம்பவமும் நிகழ்ந்தது. அதனை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு வெற்றி பேரணியை தவிர்க்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
2026 ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி தனது 2-வது ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை ஆர்சிபி கைப்பற்றியது.