ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு அணி சூதாட்டத்தில் ஈடுபட்டதா?- போலீசில் சமூக ஆர்வலர் பரபரப்பு புகார்


ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு அணி சூதாட்டத்தில் ஈடுபட்டதா?- போலீசில் சமூக ஆர்வலர் பரபரப்பு புகார்
x

பெங்களூரு அணி கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சமூக ஆர்வலர் டி.ஜே.ஆபிரகாம் போலீசில் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பெங்களூரு,

பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் கடந்த 4-ந்தேதி நடந்த ஆர்.சி.பி. அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் பலியானார்கள். இதுதொடர்பாக கப்பன் பார்க் போலீஸ் நிலையத்தில் சமூக ஆர்வலரான டி.ஜே.ஆபிரகாம் பரபரப்பு புகார் அளித்துள்ளார். 11 பேர் பலியாக காரணமான முதல்-மந்திரி சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோர் மீதும், ஆர்.சி.பி. அணி நிர்வாகம், கர்நாடக கிரிக்கெட் சங்கம் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க அவர் வலியுறுத்தி இருந்தார்.

இதுதவிர தலைமை செயலாளர் ஷாலினி ரஜனீஷ், முன்னாள் போலீஸ் கமிஷனர் தயானந்த், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கும்படி டி.ஜே.ஆபிரகாம் தான் அளித்த புகாரில் தெரிவித்திருந்தார். அந்த புகாரை போலீசாரும் பெற்றுக் கொண்டனர். பின்னர் டி.ஜே.ஆபிரகாம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் இறுதிப்போட்டி தொடங்குவதற்கு முன்பாக ஆர்.சி.பி. அணிக்கான வெற்றிக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதுபற்றி போலீசாரிடமும் அனுமதி கேட்டுள்ளனர். இதன்மூலம் ஆர்.சி.பி. அணி சாம்பியன் கோப்பையை வெல்ல சூதாட்டத்தில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதுபற்றி இந்திய கிரிக்கெட் வாரியத்திடமும் புகார் அளிப்பேன். 11 பேர் பலியான விவகாரத்தில் முதல்-மந்திரி, அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிரிக்கெட்டுக்கும், துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாருக்கும் என்ன தொடர்பு உள்ளது. அவர் ஆர்.சி.பி. அணியை ரூ.8,600 கோடிக்கு முதலில் வாங்க நினைத்தார். பின்னர் ரூ.17 ஆயிரம் கோடி கொடுத்தாவது அவர் ஆர்.சி.பி. அணியை வாங்க நினைத்ததாக சொல்கிறார்கள்.இந்த நாட்டில் சட்டம் உள்ளது. அது என்னவென்று காட்டுகிறேன். நான் மெதுவாக தான் செயல்படுவேன். ஆனால் 11 பேர் பலி விவகாரத்தில் சட்டம் என்ன செய்யும் என காட்டுவேன்"இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story