ஐ.பி.எல். தொடர் மீண்டும் தொடங்குவது எப்போது..? - அருண் துமல் தகவல்

கோப்புப்படம்
பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி இடையேயான லீக் போட்டி மீண்டும் முதலில் இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .
புதுடெல்லி,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி மார்ச் 22-ந் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்தது. இதனிடையே இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்த நிலையில் ஐ.பி.எல். தொடர் ஒருவாரம் நிறுத்தி வைக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
இந்நிலையில், இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு நேற்று ஒப்புதல் அளித்து விட்டன. முழு அளவில் மற்றும் உடனடியாக போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட இரு நாடுகளும் ஒப்பு கொண்டு விட்டன. இந்நிலையில், போர் சூழல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஐ.பி.எல் போட்டிகள் எப்போது தொடங்கும் என்ற கேள்வி ரசிகர்களிடையே நிலவி வருகிறது.
இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக ஐ.பி.எல். சேர்மன் அருண் துமல் சில தகவல்களை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, போர் நிறுத்தம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதால் பாதியில் நிறுத்தப்பட்ட ஐ.பி.எல். தொடரை மீண்டும் நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.
உடனடியாக தொடரை தொடங்க முடிந்தால் போட்டி நடைபெறும் இடங்கள், தேதிகள் உட்பட அனைத்தையும் முடிவு செய்ய வேண்டும். மேலும், அணி உரிமையாளர்கள், ஒளிப்பரப்பாளர்கள், பங்குதாரர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் பேசி எப்படி முன்னேறுவது என்பது குறித்து ஒரு வழியை கண்டு பிடிக்க வேண்டும். மேலும், இது குறித்து மத்திய அரசிடம் கலந்து ஆலோசசிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி மீண்டும் முதலில் இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .






