ஐ.பி.எல்.: நீங்கள் எதிர்கொண்ட கடினமான பந்துவீச்சாளர் யார்..? ராயுடு பதில்

image courtesy: PTI
ஐ.பி.எல். தொடரின் 18-வது வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.
மும்பை,
இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில், ஐ.பி.எல். 20 ஓவர் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய வீரர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு முன்னணி வீரர்களும் இணைந்து விளையாடுவதால் இந்த சரவெடி கிரிக்கெட்டுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் அமோக வரவேற்பு உண்டு. இதனால் 18-வது ஆண்டாக இந்த போட்டி வீறுநடை போடுகிறது. இதுவரை நடந்துள்ள 17 தொடர்களில் அதிகபட்சமாக சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா 5 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளன.
இதில் இந்திய முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடு மும்பை மற்றும் சென்னை அணிகளுக்காக விளையாடி அதில் 6 கோப்பைகளை வென்று அசத்தியுள்ளார். இரண்டு அணிகளுக்காகவும் விளையாடி கோப்பையை வென்றுள்ள அவர், கடந்த 2023-ம் ஆண்டோடு ஐ.பி.எல். தொடரிலிருந்து விடைபெற்றார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரிடம் ஐ.பி.எல். வரலாற்றில் நீங்கள் எதிர்கொண்ட கடினமான பந்துவீச்சாளர் யார்? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ராயுடு, "என்னை மிகவும் தொந்தரவு செய்தவர் சுனில் நரைன். அவரது பந்துவீச்சை என்னால் கணிக்க முடியவில்லை. அவரது பந்தை அதிரடியாக எதிர்கொள்ள விரும்பினேன். ஆனால் ஒவ்வொரு முறையும் அவரது பந்துவீச்சை நான் ஒரு பக்கமாக கணித்தால் அது இன்னொரு பக்கமாக சென்றது. கடைசி வரை அவரது பந்துவீச்சை எதிர்கொள்வது எனக்கு கடினமாக இருந்தது" என்று கூறினார்.






