இரானி கோப்பை கிரிக்கெட்: ரெஸ்ட் ஆப் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற விதர்பா

Image Courtesy: @BCCIdomestic
விதர்பா - ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடந்தது.
நாக்பூர்,
நடப்பு ரஞ்சி சாம்பியன் விதர்பா - ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே விதர்பா 342 ரன்னும், ரெஸ்ட் ஆப் இந்தியா 214 ரன்னும் எடுத்தன. 128 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய விதர்பா அணி 232 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதையடுத்து 361 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ரெஸ்ட் ஆப் இந்தியா 4-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 30 ரன்கள் எடுத்திருந்தது.
இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாளான நேற்று தொடர்ந்து பேட் செய்த ரெஸ்ட் ஆப் இந்தியா 80 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. கேப்டன் ரஜத் படிதார் (10 ரன்), ருதுராஜ் கெய்க்வாட் (7 ரன்) ஏமாற்றம் அளித்தனர். 6-வது வரிசையில் இறங்கிய யாஷ் துல் கொஞ்ச நேரம் மிரட்டிப்பார்த்தார்.
அவர் 92 ரன்னில் (8 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனதும் அவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது. அந்த அணி 73.5 ஓவர்களில் 267 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. மானவ் சுதர் 56 ரன்னுடன் அவுட் ஆகாமல் இருந்தார். இதனால் விதர்பா அணி 93 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
ஹர்ஷ் துபே 4 விக்கெட்டும், ஆதித்யா தாக்ரே, யாஷ் தாக்குர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். முதல் இன்னிங்சில் சதம் விளாசிய அதர்வா டெய்ட் ஆட்டநாயகன் விருது பெற்றார். மராட்டிய மாநிலத்துக்குட்பட்ட விதர்பா அணி இரானி கோப்பையை வெல்வது இது 3-வது முறையாகும். ஏற்கனவே 2017-18, 2018-19-ம் ஆண்டுகளிலும் இந்த கோப்பையை வென்றிருந்தது.






