இந்தியாவை கலாய்த்த பாகிஸ்தான் ரசிகர்களுக்கு இர்பான் பதான் பதிலடி

ஜூனியர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.
image courtesy; AFP
image courtesy; AFP
Published on

மும்பை,

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற ஐசிசி ஜூனியர் உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது. வருங்கால வீரர்களை முன்கூட்டியே அடையாளப்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் இந்த தொடரில் உதய் சாஹரன் தலைமையில் விளையாடிய நடப்பு சாம்பியன் இந்தியா லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் தோல்வியை சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. அதனால் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்து இந்தியா 6-வது முறையாக கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

அதை விட சீனியர் கிரிக்கெட்டில் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர்களின் இறுதிப்போட்டியில் தோல்வியை கொடுத்த ஆஸ்திரேலியாவை இந்த ஜூனியர் தொடரில் தோற்கடித்து இந்தியா பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் இருந்தது.

ஆனால் நேற்று நடைபெற்ற இந்த தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு 254 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 174 ரன்களில் ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்தது. இது மீண்டும் கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது.

கடந்த வருடம் நடந்த 2 ஐசிசி தொடரிலும் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்த இந்தியா தற்போது இதையும் சேர்த்து ஹாட்ரிக் தோல்விகளை பதிவு செய்து ஏமாற்றத்தை சந்தித்துள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்த காரணத்தால் பாகிஸ்தானை சேர்ந்த ரசிகர்கள் சமூகவலைதளங்களில் இந்தியாவை வழக்கம்போல கிண்டலடித்து வருகின்றனர்.

குறிப்பாக சீனியர் கிரிக்கெட்டில்தான் கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து ஐ.சி.சி. நாக் அவுட் போட்டிகளில் தோல்வியை சந்தித்து வருகிறீர்கள் என்று பார்த்தால் ஜூனியர் கிரிக்கெட்டிலும் சாதிக்க முடியவில்லையா என்று இந்தியாவை அந்நாட்டு ரசிகர்கள் கிண்டலடித்து வருகிறார்கள்.

அதனால் கோபமடைந்த முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் இதே தொடரின் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாத நீங்கள் இந்தியாவைப் பற்றி பேச தகுதியற்றவர்கள் என்ற வகையில் தனது எக்ஸ் பக்கத்தில் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு;- "அவர்களின் அண்டர்-19 அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாத சூழ்நிலையில் எல்லைக்கு அப்பால் உள்ள விசைப்பலகை (கீபோர்டு) வீரர்கள் நமது இளம் வீரர்களின் தோல்வியால் மகிழ்ச்சியடைகிறார்கள். இந்த எதிர்மறையான அணுகுமுறை அவர்கள் தேசத்தின் மனநிலை மோசமாக இருப்பதை பிரதிபலிக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com