ரோகித் அதிரடியாக விளையாடி 25-30 ரன்கள் அடித்தால் மட்டும் போதுமா..? இந்திய முன்னாள் வீரர் கேள்வி

image courtesy:PTI
இந்தியா வெற்றி பெற ரோகித் சர்மா பொறுப்புடன் விளையாட வேண்டும் என்று கவாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.
மும்பை,
8 அணிகள் இடையிலான ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இதில் வரும் 9-ம் தேதி நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. அரைஇறுதியில் வலுவான ஆஸ்திரேலியாவை பந்தாடிய இந்தியா கூடுதல் நம்பிக்கையுடன் களமிறங்குகிறது.
இருப்பினும் இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மாவின் பார்ம் கவலையளிப்பதாக உள்ளது. 4 ஆட்டங்களில் விளையாடி வெறும் 104 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இன்னும் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. தனக்காக இல்லாமல் அணியின் நலனுக்காக அவர் ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாட முயற்சிப்பதால் விரைவில் விக்கெட்டை பறிகொடுத்து வருகிறார்.
இந்நிலையில் ரோகித் சர்மா இப்படி 25 - 30 ரன்கள் மட்டும் அடித்தால் போதுமா? என்று இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். எனவே இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி பெற ரோகித் சர்மா பொறுப்புடன் 25 ஓவர்கள் வரை விளையாட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "இந்த அணுகுமுறையை கடந்த 2 வருடங்களாக ரோகித் பின்பற்றி வருகிறார். கடந்த ஒருநாள் உலகக்கோப்பையில் கண்டறிந்த அந்த சூத்திரத்தில் இன்னும் அவர் நிற்கிறார். அதைப் பின்பற்றி அவர் சில வெற்றிகளை பெற்றுள்ளார். ஆனால் அது அவரது திறமைக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டிய அளவு இல்லை. இந்த விளையாட்டில் பல வீரர்களிடம் இல்லாத நிறைய ஷாட்டுகளை கொண்டுள்ள ரோகித் திறமையான வீரர்.
அது போன்ற சூழ்நிலையில் 25 ஓவர்கள் வரை ரோகித் விளையாடி இந்தியா 180 - 200 ரன்கள் மட்டுமே எடுத்திருப்பதாக வைத்துக் கொள்வோம். ஆனால் அப்போது விக்கெட்டுகள் கையில் இருக்கும் என்பதால் அங்கிருந்து இந்தியாவால் 350+ ரன்கள் அடிக்க முடியும். நீங்கள் அதிரடியாக விளையாடுவது ஒரு விஷயம். அதே சமயம் 25 - 30 ஓவர்கள் வரை பேட்டிங் செய்யும் வாய்ப்பை இந்தியாவுக்கு வழங்குவது விவேகமாக இருக்கும்.
அப்படி செய்தால் எதிரணியிடமிருந்து அவர் ஆட்டத்தை எடுத்து விடுவார். அந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நீங்கள் 25 - 30 ரன்கள் மட்டும் அடித்தால் மகிழ்ச்சியாக இருப்பீர்களா? எனவே அணிக்காக நீங்கள் வெறும் 7 - 9 ஓவர்கள் வரை பேட்டிங் செய்வதை விட 25 ஓவர்கள் வரை விளையாடி தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நான் சொல்வேன்" என கூறினார்.






