

சென்னை,
ஐபிஎல் 2026 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிளே ஆப் சுற்றுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தகுதி பெற்றுள்ளன.
மறுபுறம், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உள்ளிட்ட மற்ற அணிகள் தொடரில் இருந்து வெளியேறியுள்ளன. குறிப்பாக ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ அணி இந்த சீசனில் மிக மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி, விளையாடிய போட்டிகளில் வெறும் 4 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த நிலையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உலகளாவிய கிரிக்கெட் இயக்குநரான டாம் மூடி, அணியின் எதிர்காலம் குறித்து முக்கியமான கருத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "எதிர்காலத்தை கருத்தில் கொண்டு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தலைமை குறித்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளை எடுப்போம். அணிக்கு ஒரு 'ரீசெட்' தேவைப்படுகிறது என்றே தோன்றுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
டாம் மூடியின் இந்த கருத்து, அடுத்த சீசனில் லக்னோ அணியின் கேப்டன்சி மற்றும் அணிக்கட்டமைப்பில் பெரிய மாற்றங்கள் நிகழக்கூடும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், ஐபிஎல் 2026 பிளே ஆப் தகுதிச்சுற்று-1 (Qualifier 1) போட்டி நாளை (மே 26) தர்மசாலாவில் நடைபெறுகிறது. இதில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், 2-வது இடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். தோல்வியடையும் அணிக்கு, மற்றொரு தகுதிச்சுற்று வாய்ப்பின் மூலம் இறுதிப்போட்டிக்கு செல்லும் சந்தர்ப்பம் கிடைக்கும்.