தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருடன் பிரச்சினையா..? ரோகித் சர்மா பதில்

image courtesy: PTI
தலைமை பயிற்சியாளர் கம்பீர் - ரோகித் இடையே பிரச்சினை இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஆகஸ்டு மாதம் நடந்த இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை 27 ஆண்டுக்கு பிறகு தாரைவார்த்தது. அதன் தொடர்ச்சியாக சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் மோசமாக தோற்றது. அத்துடன் ஆஸ்திரேலியாவில் நடந்த அந்த நாட்டு அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் 1-3 என்ற கணக்கில் தோற்று 10 ஆண்டுக்கு பிறகு பார்டர்- கவாஸ்கர் கோப்பையை இழந்தது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பும் பறிபோனது.
இந்த தோல்விகளுக்கு சீனியர் வீரர்கள் சுமாராக விளையாடியது முக்கிய காரணமாக அமைந்தது. அதனால் அவர்களிடம் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகின. மேலும் கேப்டன் ரோகித்துக்கும், கம்பீருக்கும் இடையே பிரச்சினை இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் இது குறித்து சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியை அறிவித்த பின் ரோகித் சர்மாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ரோகித் சர்மா கூறுகையில், "நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதில் இருவரும் தெளிவாக இருக்கிறோம். பின்னணியில் என்ன நடக்கிறது என்பதை பற்றி நான் இங்கே உட்கார்ந்து விவாதிக்க போவதில்லை. அது என்னுடைய மனதில் இருக்கிறது. கவுதம் கம்பீர் சரியானவர். ஒரு முறை நாங்கள் களத்திற்குள் நுழைந்து விட்டால் அவர் கேப்டன் செய்வதை முழுமையாக நம்புகிறார். மற்ற அடிப்படையான விஷயங்கள் களத்திற்கு வெளியே மட்டுமே நடக்கும். களத்திற்குள் சென்றதும் நான் என்ன செய்கிறேன் என்பது என்னை பொறுத்தது. அது போன்ற நம்பிக்கைதான் நாங்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ளோம். அது அப்படித் தான் இருக்க வேண்டும்" என்று கூறினார்.






