ஹர்திக் செய்த தவறால்தான் மும்பை அணி தோல்வியை தழுவியது - இர்பான் பதான் விமர்சனம்

நடப்பு ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் அணியிடம் மும்பை தோல்வியை தழுவியது.
ஹர்திக் செய்த தவறால்தான் மும்பை அணி தோல்வியை தழுவியது - இர்பான் பதான் விமர்சனம்
Published on

அகமதாபாத்,

நடப்பு ஐ.பி.எல். தொடரின் 5-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதின.

இதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவரில் 168/6 ரன்கள் எடுத்தது அதிகபட்சமாக சாய் சுதர்சன் 45, கேப்டன் கில் 31 ரன்கள் எடுக்க மும்பை சார்பில் அதிகபட்சமாக பும்ரா 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணி வெற்றி பெற கடைசி 5 ஓவர்களில் வெறும் 45 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. கைவசம் 7 விக்கெட்டுகள் இருந்தது.

அதனால் மும்பை எளிதில் வெற்றி பெறும் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் கடைசி கட்டத்தில் திலக் வர்மா 25, டிம் டேவிட் 11, கேப்டன் பாண்ட்யா 11 ரன்களில் அவுட்டாகி பினிஷிங் கொடுக்க தவறினர். இதனால் மும்பை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் இந்த போட்டியில் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்ட்யா செய்த 2 தவறுகள் மும்பையின் தோல்விக்கு காரணமானதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியுள்ளது பின்வருமாறு:-

"இந்த போட்டியில் ஹர்திக் பாண்ட்யா 2 பெரிய தவறுகள் செய்தார். முதலாவதாக பவர் பிளே ஓவர்களில் அவர் 2 ஓவர்கள் வீசியது பெரிய தவறாகும். அவர் பும்ராவை பந்து வீசுவதற்கு மிகவும் தாமதமாக அழைத்தார். இரண்டாவதாக சேசிங் செய்யும்போது டிம் டேவிட்டை அவருக்கு முன்னதாக களமிறக்கினார்.

குறிப்பாக ரஷித் கானுக்கு ஒரு ஓவர் மீதமிருந்தபோது பாண்ட்யா அவரை அனுப்பினார். ஒருவேளை சமீபத்தில் எந்த கிரிக்கெட்டையும் விளையாடாததால் ரஷித் கானை எதிர்கொள்வதை தவிர்ப்பதற்காக பாண்ட்யா அப்படி செய்திருக்கலாம் என்று நான் கருதுகிறேன். இருப்பினும் அழுத்தமான நேரத்தில் ரஷித் கானுக்கு எதிராக பாண்ட்யா போன்ற அனுபவமிகுந்த இந்திய பேட்ஸ்மேன் பெவிலியனில் அமர்ந்திருப்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com