ஸ்ரேயாஸ் ஐயரை தேர்வு செய்யாதது நல்லதுதான் - இந்திய தேர்வுக்குழுவை பாராட்டிய பனேசர்


ஸ்ரேயாஸ் ஐயரை தேர்வு செய்யாதது நல்லதுதான் - இந்திய தேர்வுக்குழுவை பாராட்டிய பனேசர்
x

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெறவில்லை.

லண்டன்,

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூன்) முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20-ந் தேதி லீட்சில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான 18 வீரர்கள் கொண்ட இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அகர்கர் தலைமையிலான தேர்வு குழுவினர் அணியை தேர்வு செய்து அறிவித்தனர்.

இந்த மாதம் தொடக்கத்தில் டெஸ்ட் போட்டியில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெற்றதால் அடுத்த கேப்டன் யார்? என்று அதிக எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் எதிர்பார்த்தபடி சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் அந்த அணியில் சமீப காலமாக தொடர்ச்சியான பார்மில் அசத்தி வரும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு இடமளிக்காத இந்திய தேர்வுக்குழுவை பல முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர்.

இந்நிலையில் இங்கிலாந்து தொடரில் ஸ்ரேயாஸ் ஐயரை கழற்றி விட்டு இந்திய தேர்வுக்குழு சிறந்த முடிவை எடுத்துள்ளதாக அந்நாட்டின் முன்னாள் வீரர் மான்டி பனேசர் பாராட்டியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "இந்திய அணி நிர்வாகத்தினர் தந்திரத்தை தவற விடவில்லை என்று நான் நம்புகிறேன். ஸ்ரேயாஸ் மிகவும் சிறந்த வீரர். ஆனால் வேகம் மற்றும் ஸ்விங் ஆகக்கூடிய சூழ்நிலைகளில் அவர் தடுமாறக்கூடியவர் என்று நம்புகிறேன். அதற்கான நுட்பம் அவரிடம் இல்லை என்று நான் நினைக்கிறேன்.

அவருடைய சாதனைகள் சிறப்பாக உள்ளன. ஆனால் அது பிளாட்டான, சுழலுக்கு சாதகமான பிட்ச்களை கொண்ட சூழ்நிலைகளில் மட்டுமே நன்றாக இருக்கிறது. ஸ்ரேயாஸ் ஐயர் சூப்பர் ஸ்டார் என்று நினைக்கிறேன். ஆனால் வேகம் மற்றும் ஸ்விங் ஆகக்கூடிய சூழ்நிலைகள் என்று வரும் போது அதை சமாளிக்க அவரிடம் நுட்பம் இல்லை.

அவர் பந்தை வரவிட்டு விளையாடுவதில்லை. கைகளை வேகமாக நகர்த்தக்கூடிய அவருடைய கால்கள் அதிகம் நகர்வதில்லை. கண் ஒருங்கிணைப்பு சிறப்பாக இருக்கிறது. இது வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகக்கூடிய சூழ்நிலைகளுக்கு பொருந்தும். ஆனால் இங்கிலாந்து போன்ற ஸ்விங் ஆகக்கூடிய சூழ்நிலைகளுக்கு பொருந்துமா என்பது சந்தேகமாகும்" என்று கூறினார்

1 More update

Next Story