அவரை போன்ற வீரர் அணியில் இருப்பது அதிர்ஷ்டமே - ஆஸி. கேப்டன் மிட்செல் மார்ஷ்


அவரை போன்ற வீரர் அணியில் இருப்பது அதிர்ஷ்டமே - ஆஸி. கேப்டன் மிட்செல் மார்ஷ்
x

image courtesy:twitter/@CricketAus

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

கெய்ன்ஸ்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது . இதில் முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்ற நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தது.

இதனையடுத்து இந்த தொடரின் முடிவை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி போட்டி கெய்ன்ஸ் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மிட்சேல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பிரெவிஸ் 53 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய அணி சார்பில் நாதன் எல்லிஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியா 19.5 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து173 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 62 ரன்கள் அடித்தார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது. மேக்ஸ்வெல் ஆட்ட நாயகனாகவும் டிம் டேவிட் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இந்த வெற்றிக்குப்பின் ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ் அளித்த பேட்டியில், “ டி20 கிரிக்கெட்டில் நெருங்கி வந்து வெற்றி பெறுவது எப்போதும் இனிமையானது. இலக்கை எட்ட வைத்த மேக்ஸ்வெல்லுக்கு நன்றி. அவர் உலகத்தரம் வாய்ந்த வீரர். அணிக்காக எல்லாவற்றையும் செய்கிறார். இந்த தொடரில் 3 ஆட்டத்திலும் அவர் வெவ்வேறு வரிசையில் ஆட வேண்டி இருந்தது. அவரை போன்ற வீரர் அணியில் இருப்பது அதிர்ஷ்டமே. அடுத்து ஒரு நாள் தொடரை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம்” என்று கூறினார்.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 19-ம் தேதி ஆரம்பமாக உள்ளது.

1 More update

Next Story