பல்வேறு சவால்களை கடந்து 100-வது டெஸ்டில் பங்கேற்பது சிறப்பானது - ஜானி பேர்ஸ்டோ

இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டி இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவுக்கு 100-வது சர்வதேச டெஸ்ட் போட்டியாக அமைய உள்ளது.
image courtesy: AFP
image courtesy: AFP
Published on

தர்மசாலா,

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இமாசலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையிலேயே 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி விட்டது.

இந்தியா ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்டாலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு இந்த டெஸ்டின் மூலம் கிடைக்கும் புள்ளி இரு அணிகளுக்கும் முக்கியமானதாகும் என்பதால் இது கவனம் பெறுகிறது. அதே வேளையில் இந்த போட்டி இந்திய வீரர் அஸ்வின் மற்றும் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ ஆகியோருக்கு 100-வது டெஸ்டாக இருப்பது கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.

இது குறித்து ஜானி பேர்ஸ்டோ நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

பல்வேறு சவால்களை கடந்து 100-வது டெஸ்டில் பங்கேற்பது சிறப்பானது. உண்மையிலேயே பெருமையாக இருக்கிறது. இது எனக்கு உணர்வுப்பூர்வமான வாரமாக இருக்கும். 50 ஓவர் உலகக்கோப்பை போட்டியின்போது தர்மசாலா மைதானத்தின் அவுட்பீல்டின் தரம் விமர்சனத்திற்குள்ளானது. இப்போது மைதான பராமரிப்பாளர்கள் அவுட் பீல்டை நல்ல முறையில் தயார் செய்து இருக்கிறார்கள். அவர்களின் பணி அற்புதம். ஆடுகளத்தை பார்க்க நன்றாக தெரிகிறது.

ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவிகரமாக இருந்தால், இது இரு அணிக்குமே சாதகமாக இருக்கும். இதே மைதானத்தில்தான் எனது 100-வது ஒரு நாள் போட்டியில் விளையாடினேன். என்றாலும் எனக்கு பிடித்தமான மைதானம் கேப்டவுன் (தென் ஆப்பிரிக்கா). ஆனால் தர்மசாலா உலகின் மிக அழகான மைதானம்.

ஆன்ட்ரூ ஸ்டிராசின் கடைசி டெஸ்ட் (2012-ம் ஆண்டு) எனக்கு பிடித்தமான போட்டிகளில் ஒன்று. 2016-ம் ஆண்டு கேப்டவுன் டெஸ்டில் (தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக) சதம் விளாசியது எனது குடும்பத்துக்கும், எனக்கும் ஸ்பெஷலானது. இதேபோல் டிரென்ட்பிரிட்ஜில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட், எட்ஜ்பஸ்டனில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் (2022-ம் ஆண்டு) ஆகியவற்றையும் எனக்கு பிடித்தமான போட்டிகளில் குறிப்பிடுவேன். கடினமான போட்டிகளை கடந்து, நாங்கள் ஒருங்கிணைந்து ஆக்ரோஷமான பாணியில் விளையாடத் தொடங்கி உலகின் கவனத்தை ஈர்த்த வகையில் இவ்விரு போட்டிகளும் என் மனதை தொட்டவை' என்று கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com