அது ஒன்றும் ஆஸ்திரேலியாவோ பாகிஸ்தானோ கிடையாது - வங்காளதேசத்தை கலாய்த்த சேவாக்

image courtesy: AFP
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவுக்கு எதிராக வங்காளதேசம் தோல்வியடைந்தது.
துபாய்,
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - வங்காளதேசம் மோதின. இதில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 49.4 ஓவர்களில் 228 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஹிரிடாய் 100 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 229 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 46.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 231 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சுப்மன் கில் 101 ரன்கள் அடித்தார். அவரே ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த போட்டியில் சேசிங் செய்த இந்திய அணி ஒரு கட்டத்தில் 144 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் வங்காளதேசம் இந்தியாவுக்கு அதிர்ச்சி தோல்வி அளித்து விடுமோ என்று இந்திய ரசிகர்கள் மத்தியில் பதற்றம் எழுந்தது. இருப்பினும் கே.எல்.ராகுல் மற்றும் சுப்மன் கில் பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றி பெற வைத்தனர்.
ஆனால் அந்த தருணத்தில் இந்தியா தோற்கும் என்று தாமும் ரசிகர்களும் 1 சதவீதம் கூட பயப்படவில்லை என்று முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்தார். இருப்பினும் வர்ணனையாளராக இருப்பதன் காரணமாக தம்மை அந்த குறிப்பிட்ட நேரத்தில் சில வார்த்தைகள் வங்காளதேசத்தை புகழ வைத்ததாகவும் சேவாக் கூறியுள்ளார். மேலும் அது வங்காளதேச அணிதான் ஆஸ்திரேலியா கிடையாது என்று கலாய்த்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "இந்திய ரசிகர்களிடம் ஏதேனும் பதற்றம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில் இது வங்காளதேசம். ஆனால் அவர்களை நீங்கள் ஒரு அற்புதமான அணி போல என்னையே கொஞ்சம் பாராட்ட வைத்து விட்டீர்கள். நான் விளையாடும் போதும் அவர்களுக்கு எதிராக பயப்பட்டதில்லை. எனவே இன்று நான் ஏன் வர்ணனையாளர்கள் அறையில் பயப்பட்டிருக்க வேண்டும்.
அது வங்காளதேச அணி. ஆஸ்திரேலியாவோ அல்லது கணிக்க முடியாமல் இருப்பதற்கு பாகிஸ்தானோ கிடையாது. எனவே இந்தப் போட்டியில் இந்திய ரசிகர்களின் இதயத்தில் வங்காளதேசத்தை நினைத்து ஒரு சதவீதம் கூட பயம் இருந்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அது மிகவும் எளிதான போட்டி. கடினமாக விளையாடும் நாம் அதை 4 ஓவர்கள் மீதம் வைத்து முடித்தோம். கில் பொறுமையுடன் மெதுவாக விளையாடினார். ஒருவேளை ரோகித், கோலி, ஸ்ரேயாஸ் ஆகியோர் நிலைத்து விளையாடி இருந்தால் 35 ஓவர்களிலேயே அந்த போட்டி முடிந்திருக்கும்" என்று கூறினார்.






