அணியின் நலனுக்காக பி.சி.சி.ஐ.-ன் விதிமுறையை மீறிய ஜடேஜா.. என்ன நடந்தது..?

image courtesy:BCCI
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் ஜடேஜா 89 ரன்கள் அடித்தார்.
பர்மிங்காம்,
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது போட்டி பர்மிங்காமில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 151 ஓவர்களில் 587 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக இந்திய கேப்டன் சுப்மன் கில் 269 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் சோயிப் பஷீர் 3 விக்கெட்டும், ஜோஷ் டாங்கு, கிறிஸ் வோக்ஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 77 ரன்கள் அடித்திருந்தது. ஜோ ரூட் 18 ரன்களுடனும் , ஹாரி புரூக் 30 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இத்தகைய சூழலில் 3-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஜோ ரூட் (22 ரன்கள்), பென் ஸ்டோக்ஸ் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்த இக்கட்டான சூழலில் 6-வது விக்கெட்டுக்கு கைகோர்த்த ஹாரி புரூக் - ஜேமி சுமித் கூட்டணி சிறப்பாக விளையாடி வருகிறது. இருவரும் சதமடித்த பிறகும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தனர். இவர்களின் சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 350 ரன்களை கடந்துள்ளது.
முன்னதாக இந்த போட்டியின் முதல் நாள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 310 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் சுப்மன் கில் 114 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 41 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் 2-வது நாளான நேற்று சுப்மன் கில்லும், ஜடேஜாவும் தொடர்ந்து பேட்டிங் செய்தனர். ஆடுகளம் பேட்டிங்குக்கு சொக்கபுரியாக காணப்பட்டதால், அவசரப்படாமல் நேர்த்தியான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ஏதுவான பந்துகளை மட்டும் எல்லைக்கோட்டுக்கு ஓடவிட்டனர். இதனால் ஸ்கோர் சீரான வேகத்தில் உயர்ந்தது. சதத்தை நெருங்கிய ஜடேஜா 89 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்த போட்டியின் 2-வது நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே மைதானத்திற்கு சென்ற ஜடேஜா அங்கு பேட்டிங் பயிற்சி மேற்கொண்டார். அந்த நாளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் நோக்கில் அவர் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
முன்னதாக இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) எந்த ஒரு வீரரும் தனியாக பயணிக்கக்கூடாது என்றும் போட்டியின் போதும் சரி, பயிற்சியின் போதும் சரி நிர்வாகம் ஏற்பாடு செய்யும் பேருந்தில் குழுவாக பயணிக்க வேண்டும் என்று விதிமுறை வகுத்துள்ளது. இதெல்லாம் அணியின் நலனுக்காவவே எடுக்கப்பட்ட முடிவாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பி.சி.சி.ஐ.-ன் இந்த விதிமுறையை ரவீந்திர ஜடேஜா மீறியதாக கூறப்படுகிறது. அதாவது ஜடேஜா வீரர்களுடன் பயணிக்காமல் தனியாக மைதானத்திற்கு சென்றுள்ளார். இருப்பினும் அவரது நோக்கம் அணியின் நலனுக்காகவே இருந்தது. அதன் காரணமாக பி.சி.சி.ஐ. அவரை தண்டிக்காது என்று நம்பப்படுகிறது.






