

கிம்பெர்லி,
13-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த பி பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரேலியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் ஜெயித்த வெஸ்ட்இண்டீஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, வெஸ்ட்இண்டீஸ் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 35.4 ஓவர்களில் 179 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக பிராசெர் மெக்குருக் 84 ரன்கள் சேர்த்தார். வெஸ்ட்இண்டீஸ் அணி தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 4 விக்கெட்டும், மேத்யூ போர்டு 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 46 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக நியூம் யங் 61 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் தன்விர் சங்கா 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.
சி பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில் வங்காளதேசம்-ஜிம்பாப்வே அணிகள் சந்தித்தன. முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 28.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டது. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டதால் பின்னர் 22 ஓவர்களில் 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று வங்காளதேச அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதனை அடுத்து அதிரடியாக ஆடிய வங்காளதேச அணி 11.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பர்வேஸ் ஹூசைன் 58 ரன்னும், மக்முதுல் ஹசன் ஜாய் 38 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
டி பிரிவில் நடந்த ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் ஆடிய கனடா அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து ஆடிய ஐக்கிய அரபு அமீரக அணி 38.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணி வீரர் பிகி ஜான் 102 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
நியூசிலாந்து-ஜப்பான் (ஏ பிரிவு) அணிகள் மோதிய ஆட்டம் மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்டது.
இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, இலங்கையை (ஏ பிரிவு) எதிர்கொள்கிறது. மற்றொரு லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்-ஸ்காட்லாந்து ( சி பிரிவு) அணிகள் மோதுகின்றன.
இந்திய நேரப்படி பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.