ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்; இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் நாளை மோதல்

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 6வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.
Image Courtesy: @ICC
Image Courtesy: @ICC
Published on

பெனோனி,

15-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. 16 அணிகள் பங்கேற்ற இப்போட்டி தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

அரையிறுதி ஆட்டங்களில் முறையே இந்திய அணி தென் ஆப்பிரிக்காவையும், ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானையும் வீழ்த்தின. இதையடுத்து புதிய சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் ஜூனியர் உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நாளை நடைபெறுகிறது.

இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு பெனோனியில் இந்த ஆட்டம் தொடங்குகிறது. ஜூனியர் உலக கோப்பையை இந்தியா 5 முறை (2000, 2008, 2012, 2018, 2022) வென்றுள்ளது. முகமது கைப், விராட் கோலி, உன்முக்த் சந்த், பிரித்வி ஷா, யாஷ் துல் ஆகியோர் தலைமையில் கோப்பை கிடைத்ததுள்ளது.

இந்தியா 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. உதய் சஹாரன் தலைமையிலான இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சில் சமபலத்துடன் உள்ளது. இந்த தொடரில் உதய் சஹாரன் 389 ரன்னும், முஷீர் கான் 338 ரன்னும், சச்சின் தாஸ் 294 ரன்னும் எடுத்து தொடரில் அதிக ரன் அடித்தவர்கள் பட்டியலில் முதல் 3 இடங்களில் உள்ளனர். பந்துவீச்சில் சவுமி குமார் பாண்டே 17 விக்கெட்டும், ரமன் திவாரி10 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளனர். ராஜ் லிம்பானி, முருகன் அபிஷேக் ஆகியோரும் பந்துவீச்சில் உள்ளனர்.

அதே வேளையில் ஆஸ்திரேலியா 3 முறை (1988, 2002, 2010) கோப்பையை வென்றுள்ளது. அந்த அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. ஹத் வெய்ப்ஜென் தலைமையிலான அந்த அணியும் பேட்டிங், பந்துவீச்சில் சம பலத்துடன் உள்ளது. அந்த அணியில் ஹாரி டிக்சன் 267 ரன்னும், ஹக் வெய்ப்ஜென் 256 ரன்னும் எடுத்துள்ளனர்.

பந்துவீச்சில் டாம் ஸ்ட்ரேக்கர், வீட்லேர் தலா 12 விக்கெட் கைப்பற்றி உள்ளனர். இந்திய அணி தோல்வியே சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளது. ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இதற்கு முன்பு இரண்டு முறை (2012, 2018) மோதியுள்ளன. இரண்டிலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com