ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்; இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய அணி தரப்பில் மஹ்லி பியர்ட்மேன், ராப் மேக்மில்லன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
Image Courtesy: @ICC
Image Courtesy: @ICC
Published on

பெனோனி,

15-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. 16 அணிகள் பங்கேற்ற இப்போட்டி தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

அரையிறுதியின் முடிவில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்நிலையில் சாம்பியன் பட்டம் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான இறுதிப்போட்டி பெனோனியில் இன்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹாரி டிக்சன், சாம் கான்ஸ்டாஸ் ஆகியோர் களம் இறங்கினர். இதில் சாம் கான்ஸ்டாஸ் டக் அவுட் ஆனார்.

இதையடுத்து ஹக் வெய்ப்ஜென் களம் இறங்கினார். ஹாரி டிக்சன் - ஹக் வெய்ப்ஜென் இணை நிதானமாக ஆடி ரன்கள் எடுத்தனர். இதில் ஹாரி டிக்சன் 42 ரன்னிலும், ஹக் வெய்ப்ஜென் 48 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய ஹர்ஜாஸ் சிங் நிதானமாக ஆடி அரைசதம் அடித்து அசத்தினார்.

ஹர்ஜாஸ் சிங் 55 ரன்னிலும் அடுத்து களம் இறங்கிய ரியான் ஹிக்ஸ் 20 ரன்னிலும், ராப் மேக்மில்லன் 2 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 253 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் ராஜ் லிம்பானி 3 விக்கெட்டும், நிமன் திவாரி 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 254 ரன்கள் எடுத்தால் சாம்பியன் பட்டம் வெல்லலாம் என்ற நிலையில் இந்திய அணி களம் இறங்கியது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆதர்ஷ் சிங் மற்றும் அர்ஷின் குல்கர்னி ஆகியோர் களம் இறங்கினர். இதில் ஆதர்ஷ் சிங் ஒரு புறம் நிலைத்து நின்று ஆட மறுமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன.

இதில் அர்ஷின் குல்கர்னி 3 ரன் அடுத்து களம் இறங்கிய முஷீர் கான் 22 ரன், உதய் சஹாரன் 8 ரன், சச்சின் தாஸ் 9 ரன், பிரியன்ஷு மோலியா 9 ரன், ஆரவெல்லி அவனிஷ் 0 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆதர்ஷ் சிங் 47 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

இதையடுத்து இந்திய அணி 115 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் இந்திய அணி 43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 174 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 79 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com