

சார்ஜா:
டி20 உலக கோப்பை தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் மோதின.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 189 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது.
இப்போட்டியின் கடைசி ஓவரை தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர் ரபாடா வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் வோக்ஸ், இரண்டாவது பந்தில் மார்கன், முன்றாவது பந்தில் ஜோர்டான் ஆகியோரை அடுத்தடுத்து வெளியேற்றினார். இதன்மூலம் ரபாடா ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இதன் மூலம் டி20 உலக கோப்பை போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 4-வது பந்துவீச்சாளர் என்ற பெருமையை ரபாடா பெற்றார்.
ஏற்கனவே, 2007ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் பிரெட் லீ, இந்த ஆண்டு டி20 உலக கோப்பையில் அயர்லாந்தின் கர்ட்டிஸ் கேம்பர், இலங்கை அணியின் ஹசரங்கா ஆகியோர் ஹாட்ரிக் விக்கெட் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.