ரஞ்சி கிரிக்கெட் அரை இறுதியில் கர்நாடக அணிக்கு 352 ரன்கள் இலக்கு

ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் அரைஇறுதியில் கர்நாடக அணிக்கு 352 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
ரஞ்சி கிரிக்கெட் அரை இறுதியில் கர்நாடக அணிக்கு 352 ரன்கள் இலக்கு
Published on

கொல்கத்தா,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் பெங்கால்-கர்நாடகா அணிகள் இடையிலான அரைஇறுதி ஆட்டம் கொல்கத்தாவில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே பெங்கால் அணி 312 ரன்னும், கர்நாடக அணி 122 ரன்னும் எடுத்தன. 190 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய பெங்கால் அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்து இருந்தது. 3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய பெங்கால் அணி 2-வது இன்னிங்சில் 161 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதைத்தொடர்ந்து 352 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய கர்நாடக அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 38 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்தது. லோகேஷ் ராகுல் ரன் எதுவும் எடுக்காமலும், ரவிகுமார் சமர்த் 27 ரன்னிலும், கேப்டன் கருண் நாயர் 6 ரன்னிலும் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர். தேவ்துத் படிக்கல் 50 ரன்னுடனும், மனிஷ் பாண்டே 11 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது. கர்நாடக அணி வெற்றி பெற மேலும் 254 ரன்கள் எடுக்க வேண்டும். அந்த அணி கைவசம் 7 விக்கெட்டுகள் இருக்கிறது.

சவுராஷ்டிரா-குஜராத் அணிகள் இடையிலான அரைஇறுதி ஆட்டம் ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. இதில் முதலில் ஆடிய சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 304 ரன்கள் எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய குஜராத் அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்து தடுமாறியது. 3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய குஜராத் அணி முதல் இன்னிங்சில் 252 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. 52 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய சவுராஷ்டிரா அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 66 ரன்கள் எடுத்து திணறியது. சேத்தன் சகாரியா 32 ரன்னுடனும், அர்பித் வசவாடா 23 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர். குஜராத் அணி தரப்பில் சின்டன் காஜா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com