கருண் நாயர் இரட்டை சதம்... முதல் இன்னிங்சில் இந்திய ஏ அணி 557 ரன்கள் குவிப்பு


கருண் நாயர் இரட்டை சதம்... முதல் இன்னிங்சில் இந்திய ஏ அணி 557 ரன்கள் குவிப்பு
x

Image Courtesy: X (Twitter) / File Image 

தினத்தந்தி 1 Jun 2025 3:30 AM IST (Updated: 1 Jun 2025 3:31 AM IST)
t-max-icont-min-icon

இங்கிலாந்து தரப்பில் ஹெய்னஸ் 103 ரன்னுடனும், மேக்ஸ் ஹோல்டன் 64 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

கேன்டர்பரி,

இந்தியா ஏ- இங்கிலாந்து லயன்ஸ் கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது ஆதிகாரபூர்வமற்ற டெஸ்ட் (4 நாள் ஆட்டம்) போட்டி கேன்டர்பரியில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் அணியின் கேப்டன் ஜேம்ஸ் ரியூ பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஏ அணி முதல் நாள் ஆட்டநேரம் முடிவில் 3 விக்கெட்டுக்கு 409 ரன்கள் அடித்திருந்தது. கருண் நாயர் 186 ரன்களுடனும், துருவ் ஜூரெல் 82 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். சர்பராஸ் கான் 92 ரன்களிலும், ஜெய்ஸ்வால் 24 ரன்களிலும், அபிமன்யு ஈஸ்வரன் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து 2-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய ஏ அணியில் கருண் நாயர் இரட்டை சதம் விளாசினார். இரட்டை சதம் அடித்த சிறிது நேரத்திலேயே கருண் நாயர் 204 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனிடையே துருவ் ஜூரெல் 94 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நிதிஷ் ரெட்டி 7 ரன்களிலும் , ஷர்துல் தாகூர் 27 ரன்களிலும் வெளியேறினர்.

இறுதியில் இந்திய ஏ அணி தனது முதல் இன்னிங்சில் 125.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 557 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து இங்கிலாந்து லயன்ஸ் அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. அணியின் தொடக்க வீரர்களாக டாம் ஹெய்னஸ் மற்றும் மெக்கின்னி களம் புகுந்தனர். இதில் மெக்கின்னி 16 ரன்னிலும், அடுத்து வந்த எமிலியோ ஹே 46 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இதையடுத்து மேக்ஸ் ஹோல்டன் களம் இறங்கினார். ஹோல்டன் - ஹெய்னஸ் இணை நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தது. இதில் ஹோல்டன் அரைசதமும், ஹெய்னஸ் சதமும் அடித்து அசத்தினர். இறுதியில் 2வது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து லயன்ஸ் அணி தனது முதல் 52 ஓவரில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 237 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து தரப்பில் ஹெய்னஸ் 103 ரன்னுடனும், மேக்ஸ் ஹோல்டன் 64 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா ஏ தரப்பில் அன்சுல் கம்போஜ், ஹர்ஷ் துபே தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இங்கிலாந்து லயன்ஸ் அணி இன்னும் 320 ரன்கள் பின்னிலையில் உள்ளது. நாளை 3ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

1 More update

Next Story