இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டார்

இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டார்
Published on

பெங்களூரு,

இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் இடம் பிடிக்க போராடி வரும் பேட்ஸ்மேன்களில் 28 வயதான கருண் நாயரும் ஒருவர். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷேவாக்குக்கு பிறகு முச்சதம் அடித்த 2-வது இந்தியர் என்ற பெருமைக்குரியவர். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். 2018, 2019-ம் ஆண்டுகளில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 14 ஆட்டங்களில் களம் இறங்கி 2 அரைசதம் உள்பட 306 ரன்கள் எடுத்தார்.

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்காக அவர் தன்னை தயார்படுத்தி வந்த நிலையில் கொரோனா பாதிப்புக்குள்ளானார். இதையடுத்து 2 வாரத்திற்கு மேலாக தனிமைப்படுத்திக் கொண்டார். அதன் பிறகு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர் முழுமையாக குணமடைந்து விட்டது தெரியவந்தது. கடந்த மாதமே அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போதிலும் இப்போது தான் அது பற்றிய விவரம் வெளியே வந்துள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கொரோனா பாதுகாப்பு நடைமுறையின்படி அமீரகம் புறப்படுவதற்கு முன்பாக அவர் இன்னும் 3 முறை கொரோனா பரிசோதனையை கட்டாயம் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். பஞ்சாப் அணி வீரர்கள் வருகிற 20-ந்தேதி அமீரகம் புறப்பட்டு செல்கிறார்கள்.

ஐ.பி.எல். போட்டி தொடர்புடையவர்களில் கொரோனாவில் சிக்கிய 2-வது நபர் கருண் நாயர் ஆவார். ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளர் திஷாந்த் யாக்னிக் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com