இங்கிலாந்து தொடருக்காக கே.எல்.ராகுல் கடினமாக உழைத்தார் - அபிஷேக் நாயர்

image courtesy:PTI
இங்கிலாந்து தொடரில் சீனியர் வீரரான கே.எல்.ராகுல் அபாரமான பேட்டிங் திறமையை வெளிப்படுத்தினார்.
புதுடெல்லி,
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5வது டெஸ்ட் போட்டி லண்டன், ஓவலில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 374 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து ஆடி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணியின் சீனியர் வீரரான கே.எல்.ராகுல் அபாரமான பேட்டிங் திறமையை வெளிப்படுத்தினார்.
இதன் காரணமாக அவர் 532 ரன்கள் அடித்துள்ளார். இந்நிலையில், இங்கிலாந்து தொடருக்காக கே.எல்.ராகுல் கடினமாக உழைத்ததாக இந்திய அணியின் முன்னாள் உதவிப்பயிற்சியாளர் அபிஷேக் நாயர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
கே.எல்.ராகுல் விளையாடும் விதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து என்னால் பேச முடியாது. அவரது ஆட்டத்தில் செய்துள்ள மாற்றங்கள் குறித்துப் பேசினால் அதன் திறன் குறைந்துவிடும். அவரது ஆட்டத்தில் கே.எல்.ராகுல் கொண்டுவந்துள்ள மாற்றங்கள் நன்றாக வேலை செய்துள்ளது என்பதை மட்டும் என்னால் உறுதியாக கூறமுடியும்.
கே.எல்.ராகுல் மிகவும் கடுமையாக உழைத்துள்ளார். கே.எல்.ராகுலுக்கு குழந்தை பிறந்த பிறகு ஐ.பி.எல் தொடரில் விளையாடினார். அதன் பின், உடனடியாக இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்காக தயாராகத் தொடங்கினார் என்பது பலருக்கும் தெரியாது. இந்த மாதிரியான சூழலில் பலரும் இவ்வாறு செய்திருக்க மாட்டார்கள். இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் முக்கியத்துவத்தை அறிந்திருந்ததால், அவர் கடுமையாக உழைத்தார்.
ஐ.பி.எல் தொடரில் அவரது கடைசி போட்டிக்குப் பிறகு, அவர் உடனடியாக இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கான பயிற்சியில் ஈடுபட்டார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி சிறப்பாக விளையாடினார். அணிக்காக எந்த இடத்திலும் களமிறங்கி சிறப்பாக விளையாட அவர் தயாராக இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.






