ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் கோலி, பும்ரா முதலிடத்தில் நீடிப்பு

ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியாவின் கோலி, பும்ரா முதலிடத்தில் நீடிக்கிறார்கள்.
ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் கோலி, பும்ரா முதலிடத்தில் நீடிப்பு
Published on

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒரு நாள் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்டிங் தரவரிசையில், ஆஸ்திரேலிய தொடரில் 2 சதங்கள் அடித்த இந்திய கேப்டன் விராட் கோலி 890 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இந்திய துணை கேப்டன் ரோகித் சர்மா 2-வது இடத்திலும் (839 புள்ளி), நியூசிலாந்தின் ராஸ் டெய்லர் 3-வது இடத்திலும் (830 புள்ளி) உள்ளனர். தென்ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் 4 இடங்கள் அதிகரித்து 803 புள்ளிகளுடன் 4-வது இடத்தை எட்டியுள்ளார். இலங்கைக்கு எதிரான தொடரில் ஒரு சதம், 3 அரைசதம் உள்பட 353 ரன்கள் குவித்ததன் மூலம் அவருக்கு இந்த ஏற்றம் கிடைத்துள்ளது.

இங்கிலாந்து ஒரு நாள் தொடரில் சிக்சர் மழை பொழிந்து 2 சதம் உள்பட 424 ரன்கள் சேர்த்து வியக்க வைத்த வெஸ்ட இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் 35 இடங்கள் எகிறி 41-வது இடத்துக்கு வந்துள்ளார். இந்திய தொடரில் 2 சதங்களுடன் 383 ரன்கள் எடுத்து தொடர்நாயகனாக தேர்வு செய்யப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா 83-வது இடத்தில் இருந்து 25-வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறார். இதே போல் இந்திய வீரர் கேதர் ஜாதவ் 11 இடங்கள் அதிகரித்து தனது வாழ்க்கையில் சிறந்த நிலையாக 24-வது இடத்தை அடைந்துள்ளார்.

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா 774 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்துள்ளார். 2-வது இடத்தில் டிரென்ட் பவுல்டும் (நியூசிலாந்து), 3-வது இடத்தில் ரஷித்கானும் (ஆப்கானிஸ்தான்), 4-வது இடத்தில் இம்ரான் தாஹிரும், 5-வது இடத்தில் ரபடாவும் (2 பேரும் தென்ஆப்பிரிக்கா) இருக்கிறார்கள்.

இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ் 6-வது இடமும், யுஸ்வேந்திர சாஹல் 8-வது இடமும் வகிக்கிறார்கள். இந்திய தொடரில் 14 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்திய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் 6 இடங்கள் உயர்ந்து 7-வது இடத்தை பிடித்துள்ளார்.

ஒரு நாள் போட்டி அணிகளின் தரவரிசையில் இங்கிலாந்து 123 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலிய தொடரை 2-3 என்ற கணக்கில் பறிகொடுத்த இந்திய அணி 2 புள்ளியை இழந்து 120 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலிய தொடரை இந்திய அணி முழுமையாக வென்றிருந்தால் முதலிடத்திற்கு வந்திருக்கும். நல்ல வாய்ப்பை இந்திய வீரர்கள் கோட்டை விட்டு விட்டனர்.

நியூசிலாந்து அணி (112 புள்ளி) 3-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்க அணி 4-வது இடத்திலும் (112 புள்ளி) உள்ளன. இந்தியாவுக்கு எதிரான தொடரை வசப்படுத்தியதால் 3 புள்ளிகள் கூடுதலாக பெற்ற ஆஸ்திரேலிய அணி மொத்தம் 103 புள்ளிகளுடன் ஒரு இடம் முன்னேறி 5-வது இடத்தை பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com