image courtesy:BCCI
image courtesy:BCCI

ஆசிய கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் குல்தீப் யாதவ் அபார சாதனை

வங்காளதேசத்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
Published on

துபாய்,

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றுக்கு வந்துள்ள நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோதுகின்றன. இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும்.

இதில் நேற்று நடைபெற்ற 4-வது ஆட்டத்தில் இந்தியா - வங்காளதேசம் மோதின. இதில் டாஸ் ஜெயித்த வங்காளதேச பொறுப்பு கேப்டன் ஜேக்கர் அலி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 168 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 75 ரன்கள் அடித்தார். வங்காளதேசம் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ரிசாத் ஹூசைன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அடுத்து 169 ரன் இலக்கை நோக்கி ஆடிய வங்காளதேச அணி 19.3 ஓவர்களில் 127 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்காளதேச அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் சைப் ஹசன் 69 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், பும்ரா, வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டும் சாய்த்தனர்.

இந்த ஆட்டத்தில் கைப்பற்றிய 3 விக்கெட்டுகளையும் சேர்த்து ஆசிய கோப்பை வரலாற்றில் (ஒருநாள் மற்றும் டி20) குல்தீப் யாதவ் இதுவரை 31 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய வீரர் என்ற அபார சாதனையை குல்தீப் யாதவ் படைத்துள்ளார்.

அந்த பட்டியல்:

1. குல்தீப் யாதவ் - 31 விக்கெட்டுகள்

2. ரவீந்திர ஜடேஜா - 29 விக்கெட்டுகள்

3. ஜஸ்பிரித் பும்ரா - 23 விக்கெட்டுகள்

அத்துடன் ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்களின் வரிசையில் 2-வது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் லசித் மலிங்கா 33 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். 

X

Dailythanthi
www.dailythanthi.com