

புனே,
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நேற்று பகல்-இரவு மோதலாக நடந்தது. இந்திய அணியில் ஆல்-ரவுண்டர் குருணல் பாண்ட்யா, வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா அறிமுக வீரர்களாக அடியெடுத்து வைத்தனர். ஏற்கனவே சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் ஆடியுள்ள குருணல் பாண்ட்யா இந்தியாவின் 233-வது ஒரு நாள் போட்டி வீரர் ஆவார்.
போட்டியில் டாஸ் ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் பந்து வீச்சு தேர்வு செய்த நிலையில், இந்தியா பேட்டிங்கை தொடங்கியது. இந்தியா 5 விக்கெட்டுக்கு 205 ரன்களுடன் (40.3 ஓவர்) தடுமாறியது. இந்த நெருக்கடியான சூழலில் விக்கெட் கீப்பர் லோகேஷ் ராகுலும், அறிமுக வீரர் குருணல் பாண்ட்யாவும் கைகோர்த்தனர்.
இருவரும் துரிதமான ரன் சேகரிப்பில் கவனம் செலுத்தினர். அதிக அளவில் ஷாட்பிட்ச் பந்துகளை வீசி திணறடிக்கும் வியூகத்துடன் செயல்பட்ட இங்கிலாந்தின் திட்டத்தை தவிடு பொடியாக்கினர். சாம் கர்ரனின் ஓவரில் 3 பவுண்டரி ஓட விட்ட குருணல் பாண்ட்யா, மற்ற வேகப்பந்து வீச்சாளர்கள் மார்க் வுட், டாம் கர்ரனின் ஓவர்களில் சிக்சர்களை பறக்க விட்டார்.
இதனால் ஸ்கோர் எதிர்பார்ப்பையும் மிஞ்சி 300 ரன்களை கடந்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்தியா 5 விக்கெட்டுக்கு 317 ரன்கள் குவித்தது. லோகேஷ் ராகுல் 62 ரன்களுடனும் (43 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்), குருணல் பாண்ட்யா 58 ரன்களுடனும் (31 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தனர். பாண்ட்யா-ராகுல் கூட்டணி 6-வது விக்கெட்டுக்கு 112 ரன்கள் (61 பந்து) திரட்டியது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்தியா 5 விக்கெட்டுக்கு 317 ரன்கள் குவித்தது. தொடர்ந்து 318 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பேட்டிங் செய்த இங்கிலாந்து, முடிவில் 42.1 ஓவர்களில் 251 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.
இந்த வெற்றியை அடைவதற்கு உறுதுணையாக இருந்தவர்களில் முக்கிய வீரர் குருணல் பாண்ட்யா. அவரது தந்தை இந்த ஆண்டு தொடக்கத்தில் தனது 71வது வயதில் காலமானார். போட்டியில் பெற்ற வெற்றியை தொடர்ந்து தனது தந்தையை நினைவுப்படுத்தி குருணல் பாண்ட்யா டுவிட்டரில் பதிவிட்டார்.
அதில், ஒவ்வொரு பந்திலும் என்னுடைய மனதிலும், இருதயத்திலும் நீங்கள் இருந்தீர்கள். நீங்கள் என்னுடன் இருந்தீர்கள் என உணர்ந்தேன். எனது முகத்தில் கண்ணீர் வழிந்தோடியது. எனக்கு வலிமையாக இருந்ததற்கும், எனக்கு மிக பெரிய உறுதுணையாக இருந்ததற்கும் நன்றி தெரிவிக்கிறேன். உங்களை பெருமையடைய செய்து விட்டேன் என நம்புகிறேன். இது உங்களுக்கானது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு விசயமும் உங்களுக்கானது என்று தெரிவித்து உள்ளார்.