இலங்கைக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டி: இங்கிலாந்து அணி மோசமான தோல்வி

இலங்கைக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 219 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
இலங்கைக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டி: இங்கிலாந்து அணி மோசமான தோல்வி
Published on

கொழும்பு,

இலங்கை - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று நடந்தது. இங்கிலாந்து அணியில் கேப்டன் மோர்கனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் அணியை வழிநடத்தினார். அந்த அணியில் சகோதரர்கள் சாம் குர்ரன், டாம் குர்ரன் இடம் பிடித்தனர். சர்வதேச போட்டி ஒன்றில் இங்கிலாந்து சகோதரர்கள் இணைந்து ஆடுவது 1999-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல்முறையாகும்.

இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்து பிரமாதப்படுத்திய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 366 ரன்கள் குவித்தது. இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். முதல் 4 வீரர்களான டிக்வெல்லா (95 ரன்), சமரவிக்ரமா (54 ரன்), கேப்டன் சன்டிமால் (80 ரன்), குசல் மென்டிஸ் (56 ரன், 33 பந்து, ஒரு பவுண்டரி, 6 சிக்சர்) அரைசதம் விளாசினர். இலங்கை அணியில் டாப்-4 பேட்ஸ்மேன்கள் ஒரே இன்னிங்சில் அரைசதம் காண்பது கடந்த 20 ஆண்டுகளில் இதுவே முதல் நிகழ்வாகும்.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் 10 பந்துகளில் ஜாசன் ராய் (4 ரன்), அலெக்ஸ் ஹாலெஸ் (0), கேப்டன் பட்லர் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை தாரைவார்த்தது. இந்த வீழ்ச்சியில் இருந்து இங்கிலாந்து அணியால் நிமிரவே முடியவில்லை. பென் ஸ்டோக்ஸ் (67 ரன்), மொயீன் அலி (37 ரன்) தவிர வேறு யாரும் சோபிக்கவில்லை. அந்த அணி 26.1 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்திருந்த போது பலத்த மழை பெய்தது. இதையடுத்து டக்வொர்த்-லீவிஸ் விதிமுறைப்படி இலங்கை அணி 219 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஒரு நாள் போட்டி வரலாற்றில் இங்கிலாந்து அணியின் மிக மோசமான தோல்வி இதுவாகும். இதற்கு முன்பு 1994-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 165 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதே மோசமானதாக இருந்தது. இலங்கை தரப்பில் அகிலா தனஞ்ஜெயா 4 விக்கெட்டுகளும், துஷ்மந்தா சமவீரா 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

இது இலங்கைக்கு ஆறுதல் வெற்றியாகவே அமைந்தது. ஏனெனில் தொடரை இங்கிலாந்து அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. ஒரு ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. அடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒரே ஒரு 20 ஓவர் போட்டி வருகிற 27-ந்தேதி கொழும்பில் நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com