தொடரை வெல்லப்போவது யார்? - கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-வங்காளதேசம் இன்று மோதல்

இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
தொடரை வெல்லப்போவது யார்? - கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-வங்காளதேசம் இன்று மோதல்
Published on

நாக்பூர்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டெல்லியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசமும், ராஜ்கோட்டில் நடந்த 2-வது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையே தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்றிரவு நடக்கிறது.

தொடக்க ஆட்டத்தில் பேட்டிங்கிலும், கடைசிகட்ட பந்து வீச்சிலும் கோட்டை விட்ட இந்திய அணி 2-வது ஆட்டத்தில் சுதாரிப்போடு விளையாடி வெற்றிக்கனியை பறித்தது. கேப்டன் ரோகித் சர்மா 6 சிக்சருடன் 85 ரன்கள் குவித்து அசத்தினார். யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர் சுழலில் மிரட்டினர். இன்றைய ஆட்டத்திலும் அதே உத்வேகத்துடன் ஆடி தொடரை வசப்படுத்தும் ஆர்வத்தில் உள்ளனர். இரண்டு ஆட்டங்களிலும் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது ரன்களை வாரி வழங்கியுள்ளார். அனேகமாக இந்த ஆட்டத்தில் அவர் மாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மக்முதுல்லா தலைமையிலான வங்காளதேச அணி முதல் ஆட்டத்தை போன்று மீண்டும் ஒரு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் வேட்கையுடன் காத்திருக்கிறது. முஷ்பிகுர் ரஹிம், மக்முதுல்லா, சவுமியா சர்கார் ஆகியோரின் பேட்டிங்கை தான் அந்த அணி நிர்வாகம் அதிகமாக சார்ந்து இருக்கிறது.

வங்காளதேச பயிற்சியாளர் ரஸ்செல் டொமிங்கோ கூறுகையில், இந்த தொடருக்கு 2 வாரங்களுக்கு முன்பு எங்களுக்கு கடினமான காலக்கட்டமாக இருந்தது. அதை கடந்து களத்தில் எங்களது வீரர்கள் காட்டிய ஆர்வமும், செயல்பாடும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. 2 வாரத்திற்கு முன்பு, நாக்பூருக்கு செல்லும் போது 1-1 என்று சமநிலையில் இருப்போம் என்று சொல்லியிருந்தால் யாரும் நம்பி இருக்கமாட்டார்கள். எனவே தற்போதைய நிலையே எங்களுக்கு மகிழ்ச்சி தான். இப்போது தொடரை வெல்ல நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. வீரர்களும் சாதிக்கும் துடிப்பில் உள்ளனர். எது எப்படியோ, இந்தியா உலகின் சிறந்த அணிகளில் ஒன்று என்பதை மறுக்க முடியாது. நாங்கள் எங்களது திறமைக்கு தக்கபடி விளையாடினால் வெற்றி வாய்ப்பு உள்ளது. யாராவது ஒரு பேட்ஸ்மேன் 70 அல்லது 80 ரன்கள் எடுக்க வேண்டியது அவசியமாகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com