

பெங்களூரு,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது மற்றும் 3-வது ஆட்டத்தில் இந்தியாவும், 2-வது மற்றும் 4-வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது.
இந்த நிலையில் இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூருவில் இன்று (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கிறது.மாலை 6.30 மணிக்கு டாஸ் போடப்பட உள்ளது. எனினும் பெங்களூருவில் கனமழை அச்சுறுத்தல் உள்ளதால் போட்டி திட்டமிட்டபடி நடக்குமா என்ற கலக்கம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
வானிலை மையத் தகவல்படி, பெங்களூருவில் மாலை 4.30 மற்றும் 5.30 மணி அளவில் மழை பெய்ய 70 சதவீத வாய்ப்புள்ளது. டாஸ் போடும் நேரமான மாலை 6.30 மணிக்கு 60 சதவீதமும், போட்டி தொடங்கும் இரவு 7.30 மணியளவில் 50 சதவீதமும் மழை பெய்யலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இரவு 10.30 மணிக்கு இந்த வாய்ப்பு 40 சதவீதமாகக் குறையும். வெப்பநிலை 21 முதல் 27 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.
மழை குறுக்கிட்டு ஆட்டம் தடைபட்டால், விதிகளின்படி அதே நாளில் போட்டியை நடத்தி முடிக்க நடுவர்கள் முயற்சிப்பார்கள். மழை காரணமாக தொடக்கம் தாமதமானால் அல்லது நடுவில் ஆட்டம் நின்றால் ஓவர்கள் குறைக்கப்பட்டு, டிஎல்எஸ் முறைப்படி இலக்கு மாற்றியமைக்கப்படும். போட்டிக்கு முறையான முடிவை அறிவிக்க இரு அணிகளும் தலா குறைந்தபட்சம் 5 ஓவர்களாவது பேட்டிங் செய்திருக்க வேண்டும். போட்டியை எப்படியாவது முடிவுக்கு கொண்டு வர விதிமுறைகளின்படி கூடுதல் நேரமும் வழங்கப்படும். போட்டி கைவிடப்பட்டால் தொடர் சமனில் முடிந்து இரு அணிகளுக்கும் கோப்பை பகிர்ந்து அளிக்கப்படும்.