இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: நான் இல்லாவிட்டாலும் இங்கிலாந்து அணி.. - பென் ஸ்டோக்ஸ்

image courtesy:ICC
இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகினார்.
லண்டன்,
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன் - தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முடிவடைந்துள்ள 4 போட்டிகளின் முடிவில் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் (4-வது போட்டி டிரா) முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் இன்று தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஆலி போப் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.
முன்னதாக இந்த போட்டியிலிருந்து தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்ட இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விலகினார். அவருக்கு பதிலாக துணை கேப்டன் ஆலி போப் அணியை வழிநடத்துகிறார்.
இந்நிலையில் தான் இல்லாவிட்டாலும் இந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என்று பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "கடைசி டெஸ்டில் ஆட முடியாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது. இந்த போட்டியில் நான் இல்லாவிட்டாலும் இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி தொடரை கைப்பற்றும் என்று நம்புகிறேன். 4-வது டெஸ்ட் முடிந்து அடுத்த 3 நாட்களில் 5-வது டெஸ்ட் தொடங்குகிறது. இது போன்ற 5 டெஸ்ட் தொடரில் இந்த இடைவெளி மிகவும் குறைவாகும். அதிக ஓவர்கள் பந்து வீசியிருக்கிறோம். நிறைய நேரம் களத்தில் செலவிட்டு இருக்கிறோம். அதனால் குறைவான இடைவெளியில் போட்டி தொடங்குவது இரு அணிக்குமே கடினமாக இருக்கும். இரண்டு டெஸ்ட் போட்டியில் 8-9 நாள் இடைவெளி கிடைத்தது. அதற்கு பதிலாக ஒவ்வொரு போட்டிக்கும் சராசரியாக 4-5 நாட்கள் இடைவெளி கொடுத்திருக்கலாம்" என்று கூறினார்.






