

டாக்கா,
ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முஷ்பிகுர் ரஹிம் இரட்டை சதத்தால் வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 522 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
ஜிம்பாப்வே-வங்காளதேச அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்து இருந்தது. மொமினுல் ஹக் 161 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். முஷ்பிகுர் ரஹிம் 111 ரன்னுடனும், கேப்டன் மக்முதுல்லா ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. முஷ்பிகுர் ரஹிம், மக்முதுல்லா ஆகியோர் தொடர்ந்து ஆடினார்கள். மக்முதுல்லா 36 ரன்னிலும், அடுத்து களம் கண்ட அரிபுல் ஹக் 4 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இதைத்தொடர்ந்து மெஹிதி ஹசன் மிராஸ், முஷ்பிகுர் ரஹிமுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாகவும், நேர்த்தியாகவும் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள்.
நிலைத்து நின்று ஆடிய முஷ்பிகுர் ரஹிம் 407 பந்துகளில் 16 பவுண்டரி, ஒரு சிக்சருடன் இரட்டை சதத்தை எட்டினார். இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 2 இரட்டை சதம் அடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமையை முஷ்பிகுர் ரஹிம் பெற்றார். தேனீர் இடைவேளைக்கு பிறகு வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 160 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 522 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. முஷ்பிகுர் ரஹிம் 421 பந்துகளில் 18 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 219 ரன்னும், மெஹிதி ஹசன் மிராஸ் 102 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 68 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
219 ரன்கள் குவித்ததன் மூலம் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் குவித்த வங்காளதேச பேட்ஸ்மேன் என்ற சிறப்பை முஷ்பிகுர் ரஹிம் பெற்றார். இதற்கு முன்பு 2017-ம் ஆண்டில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வங்காளதேச வீரர் ஷகிப் அல்-ஹசன் 217 ரன்கள் எடுத்ததே அந்த அணி வீரரின் அதிகபட்சமாக இருந்தது.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான மசகட்சா 14 ரன்னில் அவுட் ஆனார். நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 18 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 25 ரன்கள் எடுத்தது. பிரையன் சாரி 10 ரன்னுடனும், டொனால்டு திரிபானோ ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.