

மும்பை,
இந்திய முன்னாள் வீரர் சேவாக், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடும் இளம் வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷிக்கு முக்கிய ஆலோசனை வழங்கியுள்ளார். ரன் சேஸ் செய்யும் திறனை விராட் கோலியிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
இதுகுறித்து சேவாக் கூறுகையில், “இது போன்ற வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்த வேண்டும். கடைசி வரை இருந்து போட்டியை முடிக்க வேண்டும். விராட் கோலியிடம் இருந்து அதை கற்றுக்கொள்ளலாம்,” என்றார்.
வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி ஐதராபாத்தை எதிர்கொண்டது. அப்போது முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி கொல்கத்தாவுக்கு 227 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதில், தொடக்க வீரர் பின் ஆலன் உடனே அவுட் ஆன நிலையில், ரகுவன்ஷி களமிறங்கி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 27 பந்துகளில் அரைசதம் அடித்து, தொடர்ந்து இரண்டாவது அரைசதத்தை பதிவு செய்தார்.
ஆனால், 11வது ஓவரில் அவர் ரன் அவுட் ஆனது போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது. ரகுவன்ஷி மற்றும் ரிங்கு சிங் இடையேயான தவறான புரிதல் இதற்கு காரணமாக இருந்தது. இதன் பின்னர் கொகத்தா அணி 161 ரன்களுக்கு சுருண்டு, தோல்வியை சந்தித்தது.
கொல்கத்தா அடுத்ததாக 6-ம் தேதி பஞ்சாப் அணியையும், 9ஆம் தேதி லக்னோ அணியையும் எதிர்கொள்ள உள்ளது.