உள்ளூர் 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்து நியூசிலாந்து வீரர் சாதனை

உள்ளூர் 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்து நியூசிலாந்து வீரர் சாதனை படைத்துள்ளார்.
உள்ளூர் 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்து நியூசிலாந்து வீரர் சாதனை
Published on

கிறைஸ்ட்சர்ச்,

நியூசிலாந்தில், சூப்பர் ஸ்மாஷ் உள்ளூர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் கிறைஸ்ட்சர்ச்சில் நேற்று நடந்த நார்தன் டிஸ்ட்ரிக்ஸ் அணிக்கு எதிராக களம் இறங்கிய கான்டர்பரி அணியின் இடக்கை பேட்ஸ்மேன் லியோ கார்டர் ஒரே ஓவரில் 6 பந்துகளையும் சிக்சருக்கு பறக்க விட்டு சாதனை படைத்தார். நார்தன் டிஸ்ட்ரிக்ஸ் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஆன்டன் டேவ்சிச் வீசிய அந்த ஓவரை பதம் பார்த்த லியோ கார்டர் 6 சிக்சர்களையும் லெக்சைடிலேயே துரத்தியடித்தார். 29 பந்தில் 70 ரன்கள் (3 பவுண்டரி, 7 சிக்சர்) திரட்டிய லியோ கார்டர், 220 ரன்கள் இலக்கை எட்ட வைத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் தங்கள் அணிக்கு வெற்றி தேடித்தந்தார்.

ஒட்டுமொத்த சர்வதேச மற்றும் உள்ளூர் முதல்தர போட்டிகளில் ஏற்கனவே கேரி சோபர்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்), ரவிசாஸ்திரி (இந்தியா), கிப்ஸ் (தென்ஆப்பிரிக்கா), யுவராஜ்சிங் (இந்தியா), ராஸ் ஒய்ட்லி (இங்கிலாந்து), ஹஜ்ரத்துல்லா ஜஜாய் (ஆப்கானிஸ்தான்) ஆகியோர் ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்துள்ளனர். இந்த வரிசையில் 7-வது வீரராக 25 வயதான லியோ கார்டர் இணைந்துள்ளார். இதில் யுவராஜ்சிங் (சர்வதேசம்), ராஸ் ஒய்ட்லி, ஹஜ்ரத்துல்லா ஜஜாய் (இருவரும் உள்ளூர் லீக்) ஆகியோர் 20 ஓவர் போட்டிகளில் இச்சாதனையை படைத்தவர்கள் ஆவர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com