லார்ட்ஸ் டெஸ்ட்: இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க அப்போதுதான் முடிவு செய்தோம் - ஹாரி புரூக்


லார்ட்ஸ் டெஸ்ட்: இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க அப்போதுதான் முடிவு செய்தோம் - ஹாரி புரூக்
x

இந்தியா-இங்கிலாந்து 3-வது டெஸ்ட் லார்ட்சில் நடைபெற்றது.

லண்டன்,

இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. தொடரில் இந்தியா 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் நாளை தொடங்குகிறது.

முன்னதாக லார்ட்சில் நடைபெற்ற பரபரப்பான 3-வது போட்டியில் இந்திய அணி வெற்றிக்கு அருகில் வந்து தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் வெற்றி பெற 193 ரன்கள் மட்டுமே இலக்கு நிர்ணயிக்கப்பட்டதால் இந்திய அணி எளிதில் வெற்றி பெறும் என்று நினைத்தனர். ஆனால் இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சால் இந்தியா 170 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆகி தோல்வியை தழுவியது.

இந்த போட்டியில் 3ம் நாள் ஆட்டத்தின் கடைசி சில நிமிடங்களே எஞ்சிய நிலையில் இங்கிலாந்து 2வது இன்னிங்சை தொடங்கியது. பென் டக்கெட் , ஜாக் கிராவ்லி தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரை பும்ரா வீசினார். அப்போது ஜாக் கிராவ்லி வேண்டுமென்றே நேரத்தை வீணடிக்கும் வகையில் நடந்து கொண்டார்.

பும்ரா தொடர்ச்சியாக பந்து வீசுவதை தடுக்கும் வகையில் ஜாக் கிராவ்லி செயல்பட்டதுபோன்ற சூழ்நிலை உருவானது. இதனால் ஆத்திரமடைந்த இந்திய கேப்டன் சுப்மன் கில் , ஜாக் கிராவ்லியுடன் மைதானத்தில் மோதலில் ஈடுபட்டார். கில் சில மோசமான வார்த்தைகளையும் பயன்படுத்தியதாக தெரிகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில் பென் டக்கெட் சமாதானப்படுத்த முயன்றார். அப்போது, இந்திய அணியினர் திரண்டனர். இதனால், மைதானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் அந்த தருணத்தை பார்த்தபோதுதான் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க வேண்டுமென்று தாங்கள் முடிவெடுத்ததாக ஹாரி புரூக் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "பென் டக்கெட், ஜாக் கிராவ்லியிடம் இந்திய அணியினர் சென்றதை நாங்கள் பார்த்தோம். எனவே நாங்கள் சிறிய பேச்சுவார்த்தை நடத்தினோம். எனவே நாங்கள் ஒருவருக்கொருவர் ஒன்றிணைந்து அணியாக மீண்டும் அங்கு செல்லலாம் என்று நினைத்தோம். அதே சமயம் முடிந்தளவுக்கு நாங்கள் கிரிக்கெட்டின் நேர்மைத்தன்மைக்கு உட்பட்டு விளையாட முயற்சி செய்தோம். பும்ரா வீசிய அந்த ஒற்றை ஓவரில் இந்திய அணியினர் கிராவ்லி, டக்கெட் ஆகியோர் மீது மிகவும் கடுமையாக செயல்பட்டனர். அதைப் பார்த்த நாங்கள் இதுவே இந்தியாவுக்கு திருப்பி பதிலடி கொடுப்பதற்கான சரியான நேரம் என்று முடிவு செய்தோம்" என கூறினார்.

1 More update

Next Story