

லக்னோ,
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ அணியிடம் சென்னை அணி தோல்வியடைந்தது. இந்த தோல்வி குறித்து சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது;
“ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாக இருப்பதாக உணர்ந்தேன். நாங்கள் பேட் செய்தபோது, பந்தை ஹார்ட் லென்த்தில் அடிப்பது எங்களுக்குச் சிரமமாக இருந்தது. நாங்கள் 160 அல்லது 170 ரன்களை எதிர்பார்த்தோம். இறுதியில் 180 ரன்களுக்கும் மேல் எடுத்தோம். பேட்டிங்கைப் பொறுத்தவரை இதைவிடச் சிறப்பாக எங்களால் எதுவும் செய்திருக்க முடியாது.
ஆனால் லக்னோ அணியின் பேட்ஸ்மேன்களை நிச்சயம் பாராட்ட வேண்டும். அவர்கள் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள். நாங்கள் சிறப்பாக பந்துவீச தவறினோம். சில நேரங்களில் எதிரணி உங்களை விட சிறப்பாக கிரிக்கெட் விளையாடக்கூடும். அப்போது நீங்கள் அதை ஏற்றுக்கொண்டாக வேண்டும்.
இது எங்களுக்கு ஒரு மோசமான நாள். அடுத்த இரு போட்டிகள் எங்களுக்கு முக்கியமானது. எனது அணி மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. இனி அனைத்து போட்டியிலும் வெற்றி பெற வேண்டும். இது எளிமையானதாக இருக்காது. எங்களுக்கு ஒரு நல்ல நாள் அமைவதை உறுதி செய்ய வேண்டும். தற்போது உள்ள நிலைமையை மாற்றுவோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.