பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம்: இம்பேக்ட் வீரர் விருதை வென்ற இந்திய வீரர் யார் தெரியுமா..?

ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
துபாய்,
ஆசிய கோப்பை தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக சாஹிப்சாதா பர்ஹான் 40 ரன்களும், ஷாகீன் ஷா அப்ரிடி 33 ரன்களும் அடித்தனர். இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
பின்னர் 128 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 15.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் 47 ரன்களுடனும், ஷிவம் துபே 10 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். அபிஷேக் சர்மா 31 ரன்களில் (13 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் தரப்பில் 3 விக்கெட்டுகளையும் சுழற்பந்து வீச்சாளர் சைம் அயூப் எடுத்தார். குல்தீப் யாதவ் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
முன்னதாக ஆசிய கோப்பையில் ஒவ்வொரு போட்டியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்திய வீரருக்கு அணி நிர்வாகம் சார்பில் ‘இம்பேக்ட் வீரர்’ விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
அதன்படி இந்த போட்டியின் இம்பேக்ட் வீரராக அக்சர் படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பந்துவீச்சில் 2 விக்கெட் மற்றும் பீல்டிங்கில் ஒரு கேட்ச் பிடித்து ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியதால் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.






