பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம்: களம் இறங்கி வெற்றி பெறுங்கள் - இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் அறிவுரை

image courtesy:PTI
ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் வருகிற 14-ம் தேதி நடைபெற உள்ளது.
மும்பை,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில் கிரிக்கெட் ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி இருக்கும் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் 14-ம் தேதி நடைபெற உள்ளது.
பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்கு பிறகு இந்தியா- பாகிஸ்தான் அணிகள் களத்தில் நேருக்கு நேர் மோத இருப்பதால் இந்த அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. எல்லையில் ஏற்பட்ட பதற்றத்தால் இரு நாட்டு உறவு மேலும் மோசமடைந்துள்ள சூழலில் நடைபெறும் இந்த ஆட்டம் கவனிக்கத்தக்க ஒன்றாக அமைந்துள்ளது.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் இந்திய அணி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த ஆட்டத்தில் எப்படி விளையாட வேண்டும் என்பது குறித்து இந்திய வீரர்களுக்கு சில அறிவுரைகளையும் அவர் வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “இந்திய வீரர்கள் விளையாட்டில் மட்டுமே முழு கவனம் செலுத்த வேண்டும். அவர்களிடம் ஒரு சிறந்த அணி உள்ளது, அவர்கள் வெற்றி பெற வேண்டும். வீரர்கள் தங்கள் செயல்பாட்டில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும், வேறு எதிலும் கவனச்சிதறல் அடையக்கூடாது. போய் வெற்றி பெறுங்கள். அரசாங்கம் அதன் வேலையைச் செய்யும், வீரர்கள் தங்கள் வேலையைச் செய்ய வேண்டும்” என்று கூறினார்.






