பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம்: சீனியர் அணியை பின்பற்றி இந்திய கேப்டன் ஆயுஷ் மாத்ரே செய்த செயல்


பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம்: சீனியர் அணியை பின்பற்றி இந்திய கேப்டன் ஆயுஷ் மாத்ரே செய்த செயல்
x

image courtesy: twitter/@ACCMedia1

ஜூனியர் ஆசிய கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் மோதின.

துபாய்,

19 வயதுக்கு உட்பட்டோருக்கான (ஜூனியர்) 12-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் 8 முறை சாம்பியனான இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொண்டது.

மழை காரணமாக போட்டி 30 நிமிடம் தாமதமாக தொடங்கியதால் 49 ஓவர்கள் கொண்டதாக குறைக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பர்ஹான் யூசுப் பீல்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 46.1 ஓவர்களில் 240 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஆரோன் ஜார்ஜ் 85 ரன்களும், கனிஷ்க் சவுஹான் 46 ரன்களும் அடித்தனர். பாகிஸ்தான் தரப்பில் முகமது சய்யாம் மற்றும் அப்துல் சுப்ஹான் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

பின்னர் 241 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. அந்த அணி 41.2 ஓவர்களில் 150 ரன்னில் அடங்கியது. இதனால் இந்தியா 90 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ஹசிபா அசன் 70 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் தீபேஷ் தேவேந்திரன், சுழற்பந்து வீச்சாளர் கனிஷ் சவுகான் தலா 3 விக்கெட்டுகளை கபளீகரம் செய்தனர்.

முன்னதாக இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை நிலவி வருகிறது. அந்த சூழ்நிலையில் சில மாதங்களுக்கு முன் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு இந்திய அரசாங்கம் பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கைகள் எடுத்து தக்க பதிலடி கொடுத்தது.

இதனை மனதில் கொண்டு கடந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் கேப்டனுடன் கைகுலுக்க விரும்பவில்லை என தெரிவித்தார். அவர் மட்டுமல்லாது பாகிஸ்தான் அணியுடன் ஒட்டு மொத்த இந்திய அணியும் கைகுலுக்காமல் வெளியேறியது பெரிய சர்ச்சையை உண்டாக்கியது. அதே போல இறுதி போட்டியில் வென்ற பின் பாகிஸ்தான் வாரியத் தலைவர் மோசின் நக்வி கைகளால் ஆசியக் கோப்பையை வாங்க முடியாது என்று இந்தியா மறுத்து விட்டது. அதனால் கையோடு கோப்பையை எடுத்துச் சென்ற அவர் இதுவரை இந்தியாவுக்கு கொடுக்கவில்லை.

அந்த சூழ்நிலையில் இந்த ஜூனியர் ஆசிய கோப்பை தொடரில் பகைமையை மறந்து இந்தியா - பாகிஸ்தான் அணியினர் கைகுலுக்கி கொள்வார்காளா? இல்லையா? என்பது பலரது மத்தியில் கவனத்தை ஈர்த்திருந்தது.

ஆனால் ஜூனியர் ஆசியக் கோப்பையிலும் பாகிஸ்தான் கேப்டனுடன் இந்திய கேப்டன் கை குலுக்கவில்லை. இந்த போட்டியின் டாஸ் நிகழ்ச்சியின்போது, சீனியர் அணியை பின்பற்றி இந்திய ஜூனியர் அணி கேப்டன் ஆயுஷ் மாத்ரேவும், பாகிஸ்தான் கேப்டனுடன் கை குலுக்குவதை தவிர்த்துவிட்டார்.

1 More update

Next Story