ஒருவேளை தோனிக்கு என்னை பிடிக்காமல் போயிருக்கலாம் - அணியில் இடம்பெறாதது குறித்து முன்னாள் வீரர் பரபரப்பு கருத்து

image courtesy:PTI
இவர் கடந்த 2023-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார்.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான மனோஜ் திவாரி, தனது சர்வதேச கெரியரில் சந்தித்த போராட்டங்களைப் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். இந்திய அணிக்காக 12 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் ஒரு சதம் உட்பட 403 ரன்களும், 5 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். அதுபோக 3 டி20 போட்டிகளில் விளையாடி 15 ரன்கள் அடித்துள்ளார்.
2011-ம் ஆண்டு இந்திய அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடியது. இதன் கடைசி போட்டியில் திவாரி ஒரு அற்புதமான சதம் அடித்து, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா வெல்ல உதவினார். அவர் தனது அடுத்த ஒருநாள் போட்டியை ஜூலை 2012-ல் இலங்கைக்கு எதிராக விளையாடினார். அதில் அவர் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற உதவினார்.
அவர் ஆடிய நாட்களில் திறமையான வீரராக அறியப்பட்டாலும் அணியில் நிலையான இடம் கிடைக்கவில்லை. இறுதியில் கடந்த 2023-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார்.
இந்நிலையில் அணியில் நிலையாக இடம்பெறாததற்கான காரணம் குறித்து மனோஜ் திவாரி சமீபத்திய பேட்டியில் மனம் திறந்துள்ளார். அதில் அப்போதைய கேப்டன் மகேந்திரசிங் தோனி தலைமையிலான அணி நிர்வாகத்திடமிருந்து தனக்கு போதுமான ஆதரவு கிடைக்கவில்லை என்று பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “இந்திய அணியில் ஏன் நான் அதிக போட்டிகளில் விளையாடவில்லை என்று கேட்கிறீர்கள். அதற்கு நான் பதில் சொல்ல தேவையில்லை என்று நினைக்கின்றேன். இதற்கு தோனி, பிளெட்சர் (அப்போதைய பயிற்சியாளர்) மற்றும் தேர்வு குழுவினர்தான் பதில் சொல்ல வேண்டும். ஒருவேளை தோனிக்கு என்னை பிடிக்காமல் போயிருக்கலாம்.
எல்லோரும் தோனியை விரும்புகிறார்கள். மேலும் அவர் தனது தலைமைத்துவத்தை நீண்ட காலமாக நிரூபித்துள்ளார். நான் எப்போதும் சொல்வது போல் அவரது தலைமைத்துவ குணங்கள் மிகவும் நல்லவை. ஆனால், என்னைப் பொறுத்தவரை அப்படியில்லை. அவர்தான் உங்கள் கேள்விக்கு பதிலளிக்க முடியும். ஆனால், அந்த நேரத்தில் அவர் விரும்பிய மற்றும் முழு ஆதரவு அளித்த சில வீரர்ர்கள் இருந்தனர் என்று நினைக்கிறேன். பலருக்கு இது தெரியும்.
ஆனால் எல்லோரும் வெளியே வந்து பேசுவதில்லை. எனவே, கிரிக்கெட்டில் எங்கும் நடக்கும் விருப்பு வெறுப்பு மிகவும் வலுவாக இருக்கிறது. அவர் என்னை விரும்பவில்லை. நான் எப்போதுமே பயிற்சியாளர், தேர்வு குழுவினர் அல்லது கேப்டனை சந்தித்து எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என்றெல்லாம் பேசியது கிடையாது.
ஆனால், நான் முன்பே கூறியிருக்கிறேன், எப்போது எம்.எஸ். தோனியை சந்தித்தாலும், நிச்சயமாக அவரிடம் நான் 100 ரன்கள் எடுத்த பிறகு ஏன் எனக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்று கேட்பேன். தோனி தனது வீரர்களை எப்படி ஆதரித்தார் என்பது பற்றி பல வீரர்களிடம் வெவ்வேறு கருத்துகள் உள்ளன. என் அனுபவத்தில், எனக்கு நடந்தவற்றை மட்டுமே நான் பகிர முடியும். அவர் உண்மையிலேயே தனது வீரர்களை ஆதரித்திருந்தால், அந்த குறிப்பிட்ட போட்டியில் நான் நன்றாக விளையாடியதால், நிச்சயமாக என்னை ஆதரித்து எனக்கு வாய்ப்பை வழங்கியிருப்பார்” என்று கூறினார்.






