தொடர் நாயகனாக சிராஜை தேர்வு செய்ய மெக்கல்லம் விரும்பினார் - தினேஷ் கார்த்திக்

Image Courtesy: @ICC
இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்றது.
லண்டன்,
இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 224 ரன்களும், இங்கிலாந்து 247 ரன்களும் எடுத்தன. 23 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 396 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இங்கிலாந்துக்கு 374 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 85.1 ஓவர்களில் 367 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 6 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது. ஹாரி புரூக் (111 ரன்), ஜோ ரூட் (105 ரன்) ஆகியோர் சதமடித்தும் பலனில்லை. இந்திய தரப்பில் முகமது சிராஜ் 5 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது. முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது மற்றும் கடைசி டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்ட் டிரா ஆனது. இதையடுத்து 'ஆண்டர்சன்-தெண்டுல்கர்' கோப்பையை இரு அணிகளும் கூட்டாக பெற்றுக் கொண்டன.
இந்த தொடரில் இங்கிலாந்து பயிற்சியாளர் இந்திய வீரரில் ஒருவரை தொடர் நாயகனாக தேர்வு செய்ய வேண்டும். அதன்படி மெக்கல்லம் 754 ரன்கள் குவித்த இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்லை தேர்வு செய்தார். இந்த நிலையில் மெக்கல்லம் சுப்மன் கில்லிற்குப் பதிலாக முகமது சிராஜை தொடர் நாயகனாக தேர்வு செய்ய விரும்பினார் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவஹு,
போட்டி 4-வது நாள் முடிந்திருந்தால், சுப்மன் கில் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டிருப்பார். ஏனென்றால் நான்காவது நாளில் மெக்கலமிடம் விருப்பத்தை கேட்ட பொழுது அதுவரையில் சிறப்பாக செயல்பட்டதை வைத்து அவர் கில்லை தொடர் நாயகனாக தேர்வு செய்தார். இதை போட்டியின் போது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் அவர் தெரிவித்து இருந்தார்.
ஆனால், ஐந்தாவது நாளில் அவரது முடிவு மொத்தமாக மாறிவிட்டது. கடைசி 40 நிமிடங்களில் முகமது சிராஜ் அற்புதமாக செயல்பட்டு இந்திய அனுப்பி வெற்றியை தேடித்தந்ததை மெக்கலம் மிகவும் ரசித்தார். அவர் தனது முடிவையும் மாற்றி இருந்தார். ஆனால் முன்பு அறிவிக்கப்பட்டது போல விருது கில்லுக்கு கொடுக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.






