மெல்போர்ன் டெஸ்ட்; இந்தியா 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
மெல்போர்ன் டெஸ்ட்; இந்தியா 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
Published on

மெல்போர்ன்,

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 7 விக்கெட்டுக்கு 443 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 151 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது.

292 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 3-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 54 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் 4-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. இதில், இந்திய அணி 2-வது இன்னிங்சில் 37.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 399 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா நேற்று ஆட்ட நேர முடிவில் 85 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் சேர்த்திருந்தது.

ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு மேற்கொண்டு 141 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 2 விக்கெட் மட்டுமே இருந்தது. தொடர்ந்து, 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று நடந்தது. இந்த நிலையில் மழையால் ஆட்டம் தொடங்குவது பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் உணவு இடைவேளை விடப்பட்டது.

இந்நிலையில் மழை நின்றது. இதனை அடுத்து ஆட்டம் மீண்டும் தொடர்ந்தது. இதில், கம்மின்ஸ் (63) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து உள்ளார். தொடர்ந்து விளையாடிய லையன் 7 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஹேசில்வுட் ரன் எதுவும் எடுக்காமல் உள்ளார். அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 261 ரன்கள் எடுத்துள்ளது.

இதனால் இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என்ற புள்ளி கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com