

ஐதராபாத்,
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு ஐதராபாத்தில் நடந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுக்கு 235 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன் (55 ரன்), ஹென்ரிச் கிளாசென் (69 ரன்) அரைசதம் அடித்தனர். அடுத்து இமாலய இலக்கை நோக்கி களம் இறங்கிய பஞ்சாப் 23 ரன்னுக்குள் 3 விக் கெட்டுகளை பறிகொடுத்ததால் நிமிர முடியவில்லை. என்றாலும் கூப்பர் கனோலியின் சதத்தால் (107 ரன், 59 பந்து, 7 பவுண்டரி, 8 சிக்சர்) ஒரு வழியாக 200 ரன்களை கடந்தது. பஞ்சாப் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுத்து 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
முதல் 7 ஆட்டங்களில் வீறுநடை போட்ட பஞ்சாப் அணி இப்போது கடைசி 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோற்று அதிர்ந்து போயுள்ளது. பஞ்சாப் அணியின் தோல்விக்கு மோசமான பீல்டிங்கும் முக்கிய காரணம். இந்த ஆட்டத்தில் இஷான் கிஷனுக்கு 9, 18 ரன்களில் கேட்ச்சை நழுவ விட்டனர். 20 ரன்னில் ஸ்டம்பிங் வாய்ப்பில் இருந்து தப்பினார். இதேபோல் கிளாசென் 9 ரன்னில் கொடுத்த கேட்ச்சை ஷசாங் சிங் கோட்டை விட்டார். இதுவரை ஆடியுள்ள 10 ஆட்டங்களில் பஞ்சாப் மொத்தம் 16 கேட்ச் வாய்ப்புகளை வீணடித்துள்ளனர்.
இந்த நிலையில், தோல்வி குறித்து பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் கூறுகையில், 'கேட்ச்சுகளை நழுவ விட்டது எங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவு. கேட்ச் வாய்ப்புகளை சரியாக செய்திருந்தால் அவர்களை இதை விட 30-40 ரன்களுக்கு குறைவாக கட்டுப்படுத்தி இருக்கலாம். நாங்கள் களத்திலும், பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் போதுமான அளவு ஒருங்கிணைந்து செயல்படவில்லை. ஆனால் ஐதராபாத் அணியினர் ஒருங்கிணைந்த கிரிக்கெட்டை விளையாடி, போட்டியை எப்படி வெல்வது என்பதை எங்களுக்குக் காட்டினார்கள். இந்தத் தொடரில் எங்களுக்கு ஒரு கனவு போன்ற தொடக்கம் கிடைத்தது. ஆனால் நிச்சயமாக, கடந்த மூன்று போட்டிகளில் நாங்கள் சரியாகச் செய்யாத விஷயங்களைத் திரும்பிப் பார்த்து, வலுவாக மீண்டு வருவதை உறுதி செய்ய வேண்டும்.”
இவ்வாறு அவர் கூறினார்.