

முல்லன்பூர்,
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி படுதோல்வியைச் சந்தித்தது மட்டுமின்றி, ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான பந்துவீச்சு சாதனையையும் பதிவு செய்துள்ளது.
முதல் ஓவரிலேயே சீனியர் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, பிரப்சிம்ரன் சிங்கை டக் அவுட் செய்து லக்னோவிற்குச் சாதகமான தொடக்கத்தை அளித்தார். ஆனால், அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. களமிறங்கிய பிரியான்ஷ் ஆர்யா மற்றும் கூப்பர் கோனோலி ஜோடி லக்னோ பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்தனர்.
அப்போது போட்டியின் 13-வது ஓவரை வீச எய்டன் மார்க்ரமை கேப்டன் ரிஷப் பண்ட் அழைத்தார். ஏற்கனவே செட்டில் ஆகியிருந்த பஞ்சாப் பேட்டர்கள் மார்க்ரமை துவம்சம் செய்தனர். முதல் 3 பந்துகளில் கூப்பர் கோனோலி ஹாட்ரிக் சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அடுத்த பந்தை மார்க்ரம் வைடு வீசிய நிலையில், அடுத்த பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. கடைசி 2 பந்துகளில் ஸ்ட்ரைக்கிற்கு வந்த பிரியான்ஷ் ஆர்யா அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை விளாசினார்.
இந்த ஒரே ஓவரில் மொத்தம் 32 ரன்கள் குவிக்கப்பட்டன. இதற்கு முன்பு லக்னோ தரப்பில் ரவி பிஷ்னோய் (27 ரன்), ஆவேஷ் கான் (26 ரன்) ஆகியோர் கொடுத்தே அதிகமாக இருந்தது. தற்போது மார்க்ரம் அந்த மோசமான சாதனையைத் தன்வசப்படுத்தியுள்ளார்.