

ஜெய்ப்பூர்,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஜெய்ப்பூ ரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 43-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொண்டது.
'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 225 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 226 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டெல்லி அணியின் அனுபவ வீரரான கே.எல்.ராகுல், 40 பந்துகளில் 6 பவுண்டரி, 5 சிக்சருடன் 75 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அதனால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. கே.எல்.ராகுல் ஐபிஎல்-லில் மொத்தம் 17 முறை ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார். இதன் மூலம், ஐபிஎல் தொடரில் அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்றவர்களின் பட்டியலில் ஜடேஜாவை சமன் செய்து கே.எல்.ராகுல் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இந்த வரிசையில் ரோஹித் சர்மா - (21 முறை ஆட்ட நாயகன் விருது) முதலிடத்திலும், விராட் கோலி - (20), மற்றும் தோனி - (18) ஆகியோர் 2, 3-வது இடத்திலும் உள்ளனர்.