

மும்பை,
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை - ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் கட்டாயம் வெற்றிபெற வேண்டும் என்ற நிலையில் மும்பை அணி களமிறங்கியது. இந்த போட்டியில், மும்பை இந்தியன்ஸ் வீரர் ரிக்கில்டன் வெறும் 55 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்களுடன் ஆட்டமிழக்காமல் 123 ரன்கள் எடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணி 243 ரன்களை எடுக்க முக்கிய காரணமாக திகழ்ந்தார்.
ரிக்கல்டனின் அதிரடி ஆட்டத்தின்மூலம், மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் இதுவரை இல்லாத அதிகபட்ச ஸ்கோரை பதிவுசெய்தது. இதன் மூலம், மும்பை அணிக்காக ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை ரிக்கல்டன் படைத்துள்ளார்.
கடந்த 2008-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சனத் ஜெயசூரியா எடுத்த 114* ரன்கள் எடுத்ததே மும்பைக்காக ஒரு பேட்ஸ்மேனின் அதிகபட்ச ரன்னாக இருந்தது. இந்த சாதனையை நேற்றைய ஆட்டத்தின் மூலம் ரிக்கல்டன் முறியடித்துள்ளார்.
நேற்றைய போட்டியில் ரிக்கல்டன் 44 பந்துகளில் சதம் அடித்தார். இது மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன்களில் அதிவேகமானதாகும். இதன் மூலம், 2008-இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஜெயசூர்யா 45 பந்துகளில் எடுத்த சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
ரிக்கல்டனின் அதிரடி சதத்தின் மூலம் 243 ரன்கள் எடுத்தும், மும்பை அணி தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.