

சென்னை,
ஐபிஎல் 2026 சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் எம்.எஸ். தோனியின் பக்கம் அனைவரின் பார்வையும் திரும்பியுள்ளது. இந்த சீசனில் இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடாத தோனி, வலைப்பயிற்சியில் பந்துவீசும் வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
வழக்கமாக பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் பயிற்சியில் ஈடுபடும் தோனி, இம்முறை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக நெட்ஸில் ஸ்பின் பவுலிங் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
இது வரும் மே 10-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோனி விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. தோனி அணிக்குத் திரும்பினால் அது சிஎஸ்கே-விற்கு மிகப்பெரிய பலமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
சென்னை அணி சீசனின் தொடக்கத்தில் தொடர் தோல்விகளைச் சந்தித்தாலும், தற்போது மீண்டெழுந்து பிளே-ஆப் ரேஸில் நீடிக்கிறது. எஞ்சியுள்ள 4 போட்டிகளில் குறைந்தது 3-ல் வெற்றி பெற்றால் மட்டுமே சென்னை அணியால் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும்.