

சென்னை,
இந்திய முன்னாள் வீரர் புஜாரா, வரும் ஐபிஎல் தொடரில் தோனி மேல் வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இறுதி ஓவர்களில் மட்டுமே களமிறங்குவதற்குப் பதிலாக, அவருக்கு அதிக நேரம் கிரீஸில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் அணிக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று அவர் கூறினார்.
இதுகுறித்து புஜாரா பேசுகையில், “தோனி 8 அல்லது 9-வது இடத்தில் பேட்டிங் செய்வதில் அர்த்தமே இல்லை. அவர் தனியாகவே போட்டியின் நிலையை மாற்றக்கூடிய திறன் கொண்டவர். சிஎஸ்கே அணியில் அதுபோன்ற திறன் கொண்ட மற்றொரு வீரர் இல்லை. தோனி 5 அல்லது 10 பந்துகள் மட்டுமே எதிர்கொண்டால் என்ன செய்ய முடியும்? ஆனால் 25 அல்லது 30 பந்துகள் விளையாட வாய்ப்பு கிடைத்தால் என்ன செய்ய முடியும் என்று நினைத்துப் பாருங்கள்,” என்றார்.
வரவிருக்கும் ஐபிஎல் 2026 தொடரில், தோனியை மேல் வரிசையில் பேட்டிங் செய்ய வைத்தால் அவர் இன்னும் அணிக்கு முக்கிய பங்கு வகிக்க முடியும் என்று புஜாரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2025 ஐபிஎல் தொடரில் தோனியின் பேட்டிங் இடம் குறித்து பெரிய விவாதம் எழுந்தது. குறிப்பாக பெங்களூருக்கு எதிரான போட்டியில் அவர் 9-வது இடத்தில் களமிறங்கியது விமர்சனத்திற்குள்ளானது. பின்னர் ஸ்டீபன் பிளெமிங், தோனிக்கு இருந்த முழங்கால் பிரச்சினையை கருத்தில் கொண்டு அந்த முடிவு எடுக்கப்பட்டதாக விளக்கம் அளித்தார்.