

ஆமதாபாத்,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்த இங்கிலாந்து அணி அடுத்து 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. இந்த 5 ஆட்டங்களும் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கிறது.
இதன்படி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ததையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான்-கே.எல்.ராகுல் களமிறங்கினர். எனினும், அவர்கள் முறையே 4, 1 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் கோலி ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.
அடுத்து விளையாடிய ரிஷாப் பண்ட் (21) மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் (67) ஆட்டத்தின் போக்கை இந்திய அணி பக்கம் திருப்பினர். பாண்ட்யா (19) ரன்களில் ஆட்டமிழந்த பின்பு விளையாடிய அணி வீரர்கள் ஒற்றை இலக்கத்திலேயே அணிக்கு ரன்களை சேர்க்க முடிந்தது.
இதனால் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்திய அணி 124 ரன்கள் எடுத்தது.
இதனை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜேசன் ராய் (49), பட்லர் (28) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் மலான் (24) மற்றும் பெயர்ஸ்டோ (26) ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டினர். இங்கிலாந்து 15.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.
இதுபற்றி இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகன் கூறும்பொழுது, ஐ.பி.எல்.லில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியினர் இருபது ஓவர் போட்டியில், டீம் இந்தியாவை விட சிறந்த அணியாக உள்ளது என கூறியுள்ளார்.
அவர் டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், இந்திய கிரிக்கெட் அணியை விட மும்பை இந்தியன்ஸ் அணியினர் சிறந்த டி20 அணியாக உள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியை குறிப்பிடுகிறேன் என தெரிவித்து உள்ளார்.