இந்திய வீரர்களை முயற்சிக்காததே டெல்லி அணியுடன் என்னுடைய பிரச்சனையாகும் - இந்திய முன்னாள் வீரர்

பஞ்சாப் கிங்ஸ்-க்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி தோல்வி கண்டது.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

மும்பை,

17-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் கடந்த 22-ம் தேதி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று முல்லன்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் டெல்லி அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி 9 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்தது. டெல்லி தரப்பில் முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆக இம்பேக்ட் வீரராக களம் இறங்கிய அபிஷேக் போரெல் அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

இதையடுத்து இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணி சாம் கர்ரனின் அரைசதத்தின் உதவியின் மூலம் 19.2 ஓவர்களில் 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. காயத்திலிருந்து குணமடைந்து கேப்டனாக களமிறங்கிய ரிஷப் பண்ட் தலைமையில் முதல் போட்டியிலேயே டெல்லி தோல்வியை சந்தித்தது அந்த அணி ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

இந்நிலையில் இந்த போட்டியில் அதிரடி வீரர் பிரித்வி ஷா இடம் பெறாதது ரசிகர்களுக்கு அதிச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து பிரித்வி ஷா, அபிஷேக் போரெல் போன்ற இந்திய வீரர்களை நம்பி டாப் ஆர்டரில் வாய்ப்பு வழங்காத வரை டெல்லியால் ஜெயிக்க முடியாது என இந்திய முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

நீங்கள் தேர்வு செய்த இந்திய வீரர்களுக்கு ஏன் ஆதரவு தருவதில்லை? இந்திய வீரர்களுக்கு டெல்லி நிர்வாகம் ஆதரவு கொடுக்காததற்கான காரணத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. எப்போதும் இந்திய வீரர்களை முயற்சிக்காததே டெல்லி அணியுடன் என்னுடைய பிரச்சனையாகும்.

போரெல் டெக்னிக்கை பாருங்கள். அவர் டாப் ஆர்டரில் வந்தால் இன்னும் வெற்றிகரமாக செயல்பட்டிருப்பார். ஆனால் முயற்சிக்காவிட்டால் அவரைப் பற்றி எப்படி தெரிந்து கொள்ள முடியும். ஏன் அவரை 3 அல்லது 4வது இடத்துக்கு பதிலாக 9வது இடத்தில் பயன்படுத்துகிறீர்கள்?.

கடந்த வருடம் சிறப்பாக செயல்பட்ட அக்சர் பட்டேல் ஏன் 7-வது இடத்தில் விளையாடினார். இப்படியே போனால் நல்ல பார்மில் இருக்கும் வீரர்களை எப்போது தான் நீங்கள் பயன்படுத்துவீர்கள். இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com