

டாக்கா,
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து வங்காளதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் நஹித் ராணா நீக்கப்பட்டுள்ளார். மருத்துவக் குழு விளையாடுவதற்கு அனுமதி அளித்திருந்த போதிலும், அவரை அவசரமாக மீண்டும் களமிறக்க வேண்டாம் என்று வங்காளதேச அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
வங்காளதேச அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான நஹித் ராணா, காயம் காரணமாக சமீபகாலமாக சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் இருந்து வந்தார். அவருக்கு ஏற்பட்ட லேப்ரம் (தோள்பட்டை மூட்டு சார்ந்த) காயத்துக்கு ஆஸ்திரேலியாவில் நீண்டகால சிகிச்சை மற்றும் மறுவாழ்வு பயிற்சி அளிக்கப்பட்டது.
சிகிச்சையை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய அவர், ஆஸ்திரேலிய மருத்துவ நிபுணர்களிடம் இருந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்கான அனுமதியையும் பெற்றார். இதனால் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அவரை முழுமையாக தயார்படுத்திய பிறகே சர்வதேச போட்டிகளில் விளையாட வைக்க வேண்டும் என்று வங்காளதேச கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக்குழு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து தேர்வுக்குழு உறுப்பினர் ஒருவர் கூறுகையில்,
"நஹித் ராணாவை அவசரப்படுத்த நாங்கள் விரும்பவில்லை. அவர் எங்களுடைய முக்கியமான பந்துவீச்சாளர்களில் ஒருவர். அவரிடம் இருந்து சிறப்பான ஆட்டத்தைப் பெறுவதற்கு சரியான திட்டமிடல் அவசியம். காயத்தில் இருந்து திரும்பியுள்ள அவருக்கு போதுமான கால அவகாசம் வழங்க விரும்புகிறோம்" என்றார்.